திண்டுக்கல் குடிநீருக்கு பயன்படும் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்க நீர்மட்டம் உயர்வு: பொதுமக்கள் மகிழ்ச்சி


நிலக்கோட்டை: செம்பட்டி அருகே, ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே, ஆத்தூரில் காமராஜர் நீர்த்தேக்கம் உள்ளது. இங்கு தேக்கப்படும் நீர், திண்டுக்கல் மாநகருக்கும், ஆத்தூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் உள்ள கிராமங்களுக்கு குடிநீராக பயன்படுகிறது. கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலை கிராமங்களான பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, ஆடலூர், பன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால், ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரியில் பெய்த மழையால், 23.6 அடி உயரமுள்ள ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டி, மறுகால் பாய்ந்தது. அதன்பின் வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்தது.

மீண்டும் நீர்வரத்து கிடுகிடு…
இந்நிலையில், கடந்த வாரம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் நீர்வரத்து வரத்து தொடங்கியது. இதனால், 13.1 அடியாக இருந்த ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் நேற்று முன்தினம் நிலவரப்படி 14.2 அடியாக உயர்ந்தது. இந்நிலையில், சித்தையன்கோட்டை, நரசிங்கபுரம், போடிக்காமன்வாடி, அழகர்நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தாமரைக்குளம், அழகர்நாயக்கன்பட்டிகுளம், வாடிக்குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களுக்கு தண்ணீர் நிரப்புவதற்காக, ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு சென்ற தண்ணீரை கன்னிமார் கோவில் அருகே அடைத்து, ராஜவாய்க்கால் வழியாக திறந்து விட்டுள்ளனர். தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post திண்டுக்கல் குடிநீருக்கு பயன்படும் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்க நீர்மட்டம் உயர்வு: பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: