திருச்செந்தூரில் நாளை மறுநாள் வைகாசி விசாகம்: பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை மறுதினம் (22ம் தேதி) வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதற்காக பார்க்கிங் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதோடு சிறப்பு பஸ்கள் மற்றும் ரயில்களும் இயக்கப்படுகின்றன. அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருடம் முழுவதும் திருவிழாக்கள் நிறைந்து காணப்பட்டாலும் முக்கிய விழாவாக கந்த சஷ்டியும், வைகாசி விசாகமும் போற்றப்படுகிறது. இக்கோயிலில் முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரத் திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா, நாளை மறுதினம் (22ம் தேதி) நடைபெறுகிறது. விசாகத் திருவிழா, வசந்த திருவிழாவாக கடந்த 13ம்தேதி தொடங்கி 10 நாட்கள் நடந்து வருகிறது.

தினமும் பகலில் சுவாமி ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் கோயில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி, மாலையில் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனையாகி, கிரிவீதி வலம் வந்து கோயில் சேர்கிறார். 10ம் திருநாளான நாளை மறுதினம் (22ம் தேதி) வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் கோயிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்கிறார். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும், விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெறுகிறது.

தொடர்ந்து மகா தீபாராதனையாகி தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து கோயில் சேர்கிறார். இந்நிலையில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களாக மாலை அணிந்து விரதம் துவங்கிய பக்தர்கள் விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் வேல் குத்தியும், காவடி, பால்குடம் எடுத்தும் முருகன் பாடலை பாடி ஆடி வழிநெடுகிலும் வந்து கொண்டிருக்கின்றனர். அதிகாலை முதல் பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறில் புனித நீராடியும் இலவச பொது தரிசனம், ரூபாய் 100 சிறப்பு கட்டண தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் வழியிலும் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

இதனால் கோயிலில் வழக்கமான விடுமுறைக்கு வந்துள்ள பக்தர்கள் மற்றும் பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்தால் கோயில் வளாகமே நிரம்பி வழிகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில்முருகன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு
வைகாசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக நாளை (மே 21ம் தேதி) கோயில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகிறது. விசாகத்தன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதேபோல் விசாகத்திற்கு மறுநாள் மே 23ம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகிறது.

5 இடங்களில் வாகன நிறுத்தம்
திருச்செந்தூருக்கு வைகாசி விசாகத் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் தங்களை வாகனம் நிறுத்த வசதியாக நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஐந்து இடங்களில் வாகன நிறுத்துமிடம் மாவட்ட காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை சாலை வழியாக வரும் வாகனங்கள் அந்தந்த நிறுத்தங்களில் நிறுத்திட போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் நகரின் எல்லையில் இருந்து கோயிலுக்கு சென்று வர பஸ் வசதியும் செய்யப்படுகிறது.

வெளி மாவட்டங்களிலிருந்து சிறப்பு பஸ்கள்
இந்த ஆண்டு வைகாசி விசாகம் கோடை விடுமுறையான மே மாதம் 22 ஆம் தேதி வருவதால் வழக்கமாக வரும் பக்தர்கள் கூட்டத்தை விட கூடுதலான பக்தர்கள் பங்கேற்பாளர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குறிப்பாக மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, தென்காசி, ராஜபாளையம், திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

2 ஸ்பெஷல் ரயில்கள்
வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு நெல்லை – திருச்செந்தூர் இடையே வரும் 22ஆம் தேதி 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. திருநெல்வேலி – திருச்செந்தூர் சிறப்பு ரயில் (ரயில் எண் 06857) திருநெல்வேலியிலிருந்து காலை 6.40 மணிக்கு புறப்பட்டு 8.15 மணிக்கு திருச்செந்தூருக்கு வந்தடையும். மறு மார்க்கமாக திருச்செந்தூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில் (ரயில் எண் 06858) திருச்செந்தூரிலிருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு 10.50 மணிக்கு திருநெல்வேலிக்கு வந்தடையும். திருநெல்வேலியிலிருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு திருச்செந்தூருக்கு வந்தடையும். மறுமார்க்கமாக திருச்செந்தூரில் இருந்து மதியம் 01.30 மணிக்குப் புறப்பட்டு மாலை 3 மணிக்கு திருநெல்வேலிக்கு வந்தடையும். இந்த சிறப்பு ரயில் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, நாசரேத், கச்சனாவிளை, குரும்பூர், ஆறுமுகநேரி மற்றும் காயல்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

The post திருச்செந்தூரில் நாளை மறுநாள் வைகாசி விசாகம்: பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: