வடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலியில் ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும்

*பொதுமக்கள் கோரிக்கை

வடலூர் : வடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலியில் ரயில் நிலையத்தை மேம்படுத்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கடலூர் மாவட்டத்தின் மைய நகரமாக வடலூர் இருந்து வருகிறது. மேலும் இங்கு உலகப்புகழ்பெற்ற வள்ளலார் தெய்வ நிலையம், அரசு கல்லூரி, மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், வியாபார நிறுவனங்கள், சிட்கோ தொழிற்பேட்டை, அரசு மற்றும் தனியார் வங்கிகள், மொத்தம் மற்றும் சில்லரை வியாபார நிறுவனங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

இதனால் இங்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்வர். மேலும் இப்பகுதி மையமாக இருப்பதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த வழியாகத்தான் செல்லும். வடலூர் சத்திய ஞான சபைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

அதேபோன்று மாத பூச தினத்தன்று ஆயிரக்கணக்கான மக்களும், தைப்பூச தினத்தன்று லட்சக்கணக்கான மக்களும் கூடுவர். இதே போன்று குறிஞ்சிப்பாடியில் அரசு மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், மொத்தம் மற்றும் சில்லரை வணிகம் குறிப்பாக ஜவுளி வர்த்தகம் நிறைந்த பகுதியாகும். இதே போல நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் உள்ளது. இங்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இப்பகுதி பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக கடலூர்-விருத்தாசலம்-சேலம்-திருச்சி ரயில்பாதை ஏற்படுத்தப்பட்டு குறிஞ்சிப்பாடி, வடலூர், நெய்வேலி மந்தாரக்குப்பம் ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இங்கிருந்து சேலம், பெங்களூர், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரயில்கள் காலை, மாலை என இரு வேளைகள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

இவ்வழியாக இயக்கப்பட்ட பயணிகள் ரயிலை பயன்படுத்தி இப்பகுதி பொதுமக்கள் கடலூர், திருச்சி, சேலம் ஆகிய பகுதிகளுக்கு சென்று அங்கிருந்து சென்னை, மதுரை, நெல்லை, கோவை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி போன்ற ஊர்களுக்கு சென்று வந்தனர். இப்பாதையில் ரயில் சேவை துவங்கி சுமார் 4 ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறன்றன.

அவையும் எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் இயங்கும் பயணிகள் ரயில்கள் ஆகும். முன்பதிவு பெட்டிகள் கொண்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்காத பாதையாக இப்பாதை திகழ்ந்து வருகிறது. தற்போது வரை காலை நேரத்தில் 2 பயணிகள் ரயில்களும், மாலை நேரத்தில் 2 ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த ரயில் நிலையங்களில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லை.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்: வடலூர் சத்திய ஞான சபைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதேபோன்று மாத பூச தினத்தன்று ஆயிரக்கணக்கான மக்களும், தைப்பூச தினத்தன்று லட்சக்கணக்கான மக்களும் கூடுவர். இங்குள்ள ரயில் நிலையத்தை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக திருச்சி, சேலம், கடலூர் ஆகிய பகுதிகளில் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையத்தில் 2 கழிப்பறைகள் மட்டும் உள்ளன. மேலும் என்எல்சி நிறுவனத்தால் கட்டி கொடுக்கப்பட்ட கழிப்பறை பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது.

மேலும் இப்பகுதியில் போதுமான மின்விளக்குகள் வசதி இல்லாமல் இருப்பதால் அருகில் உள்ள இடத்தில் சமூக விரோதிகள் மது அருந்தி வருகின்றனர்.இதுபோன்று நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த ரயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது. மேலும் குறிஞ்சிப்பாடி ஜவுளி வர்த்தகம் நிறைந்த பகுதியாகும். இந்த 3 ரயில் நிலையங்களில் இருந்து அதிகளவு ரயில் சேவை இருந்தால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்நிலையில் வடலூர் ரயில் நிலையம் சரக்கு ரயில் போக்குவரத்தில் அதிகளவில் வருவாய் ஈட்டும் ரயில் நிலையமாக உள்ளது.

இருப்பினும் இந்த ரயில் நிலையங்களில் முன்பதிவு செய்யும் வசதிகள் இல்லை. முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி, சிதம்பரம் பகுதிகளில் உள்ள ரயில் நிலையத்துக்குத்தான் செல்ல வேண்டும். அது மட்டுமின்றி மேற்கூரைகள் இல்லாததால் மழை, வெயில் காலங்களில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த ரயில் பாதையில் பராமரிப்பு பணி அல்லது விபத்து ஏற்பட்டால் மட்டும் அதிகாரிகளுக்கு நினைவுக்கு வருகிறதே தவிர அடிப்படை வசதி, ரயில் சேவை அதிகரிப்பு, ரயில் நிலைய மேம்பாடு குறித்து எந்த சிந்தனையும் இல்லை. எனவே இந்த ரயில் நிலையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், கூடுதல் ரயில் சேவைகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலியில் ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: