* 6.41 கோடியில் இருந்து 5.44 கோடியாக சரிவு
* சென்னை மாவட்டத்தில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
* செங்கை, கோவை, திருப்பூர் மாவட்டத்திலும் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்
சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் மூலமாக இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது பொதுமக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 6.41 கோடியில் இருந்து 5.44 கோடியாக சரிந்துள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக பீகாரில் தேர்தலுக்கு முன்னர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணியை நடத்தியது. இந்த பணிகள் காரணமாக சுமார் 60 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.
மேலும், அம்மாநில தேர்தலுக்கு முன்னர் இந்த பணிகளை மேற்கொள்வதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இருப்பினும் 2ம் கட்டமாக தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம் மற்றும் சட்டீஸ்கர், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் என 9 மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய 3 யூனியன் பிரதேசங்கள் உள்ள 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் பணி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நவம்பர் 4ம்தேதி முதல் எஸ்ஐஆர் பணி தொடங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர அவசரமாக செய்யக் கூடாது. கால அவகாசம் கொடுக்க வேண்டும், நடைமுறைச் சிக்கல்கள் இல்லாமல் செய்ய வேண்டும், ஏப்ரல் மாதம் தேர்தலை வைத்துக் கொண்டு இப்போது இதனைச் செய்ய தொடங்குவது சரியானது அல்ல. முறையானது அல்ல என்பதால் வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தத்தை எதிர்ப்பதாக அறிவித்து இருந்தார்.
இதேபோன்று பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. தொடர்ந்து திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் ஆகிய 4 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், அவசர அவசரமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருவதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
‘மக்களின் வாக்குரிமையை பறிக்க பாஜவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக இது அமைந்துள்ளது’ என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.
இவ்வாறு, தமிழகத்தில் எழுந்த கடும் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை கடந்த மாதம் நவம்பர் 4ம் தேதி முதல் தேர்தல் ஆணையம் தொடங்கியது. டிசம்பர் 4ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று, படிவங்களை கொடுத்து அதை பூர்த்தி செய்து பெற்று வந்தனர். ஆனால் போதுமான ஊழியர்கள் இல்லாததால் ஏற்பட்ட பணி அழுத்தம் காரணமாக சில இடங்களில் அலுவலர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இருப்பினும் பணிகள் வேகமாக நடந்து முடிந்தன.
அலுவலர்களுக்கு உதவியாக அரசியல் கட்சியின் வாக்குச்சாவடி நிலை முகவர்களும் இந்த பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் படிவங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம்களும் நடந்தன. தொடர்ந்து வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட கணக்கீட்டுப் படிவங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த நவம்பர் 30ம்தேதி இந்திய தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைப்பதற்கான கால அவகாசத்தை ஒரு வாரம் நீட்டித்தது. அதாவது, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை திருப்பி ஒப்படைக்க, டிசம்பர் 11ம்தேதி வரை கால அவகாசம் வழங்கியது.
எஸ்ஐஆர் பணிகளுக்கு, தமிழ்நாடு மற்றும் கேரளா எதிர்ப்பு தெரிவித்ததால், தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. தொடர்ந்து 11ம் தேதி வரை எஸ்ஐஆர் படிவங்கள் பெறும் பணி நடந்து வந்தது. அன்றைய தினம் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த காலக்கெடு முடிவடைய இருந்தது. இந்நிலையில் அன்றைய தினம் இரண்டாவது முறையாக படிவங்களை திருப்பி வழங்குவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டது. அதாவது 14ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தேர்தல் ஆணையம் 2 முறை வழங்கிய கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை 100 சதவீதம் வழங்கி, அவற்றை திரும்பவும் பெற்று விட்டனர்.
இந்த படிவங்களை வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் ஏற்கனவே பதிவேற்றம் செய்து விட்டனர். தற்போது பதிவேற்றம் செய்யப்பட்ட படிவுகளின் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தமிழ்நாட்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இந்த பட்டியலின்படி, சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 14,25,018 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 7,01,871 பெயர்களும், 3வதாக கோவை மாவட்டத்தில் 6,50,590 பெயர்களும், 4வதாக திருப்பூர் மாவட்டத்தில் 5,63,785 பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் மிக குறைந்த மாவட்டமாக அரியலூர் மாவட்டம் இடம்பெற்றுள்ளது. இங்கு 24,368 பெயர்கள் மட்டுமே நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் அறிவித்தபடி எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடங்கி நடந்தது. டிசம்பர் 14ம் தேதி முடிவடைந்ததை தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வரைவு வாக்காளர்கள் பட்டியலை வெளியிட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 27ம் தேதியில் மொத்தமாக வாக்காளர்கள் எண்ணிக்கை 6,41,14,587 இருந்தனர்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர்கள் பட்டியலில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,43,76,755 ஆக உள்ளனர். அதில் 2,66,63,233 ஆண் வாக்காளர்கள், 2,77,60,332 பெண் வாக்காளர்கள், 7,191 மூன்றாம் பாலின வாக்காளர்கள் மற்றும் 4,19,355 மாற்றித்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் 15.18 சதவீதம் ஆகும். எஸ்.ஐ.ஆர். பணிக்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடுவீடாக 3 முறை விசாரணை மேற்கொண்டுள்ளனர். இடம்பெயர்ந்தவர்கள், இறப்புகள் மற்றும் இரட்டை வாக்குகள் ஆகியோர் விவரங்கள் வரைவு வாக்காளர்கள் பட்டிலில் இடம்பெற்றுள்ளனர்.
அதன்படி தமிழகத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 26,94,672, இடம்பெயர்ந்தவர்கள் 66,44,818, இரட்டை வாக்குகள் 3,39,278 என கண்டறியப்பட்டுள்ளது. இதில் வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெறாதவர்கள் மற்றும் புதிதாக சேர்க்க விருப்பம் உள்ளவர்கள் வாக்குச்சாவடி அலுவலர்கள் அல்லது ஆன்லைன், சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம். அதுமட்டுமின்றி இரு வார இறுதி நாளில் அனைத்து பூத்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்த இருக்கிறோம். அந்த முகாமில் அவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வரைவு வாக்காளர் பட்டியலின் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டவர்களின் பெயர்கள் எதுவும் நீக்கப்படவில்லை. சோழிங்கநல்லூர், பல்லாவரம், ஆலந்தூர் ஆகிய தொகுதிகளில் அதிக வாக்காளர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் ஆன்லைன் மூலமாக 5,19,275 படிவம்-6 பெறப்பட்டுள்ளது. மேலும் வரைவு வாக்காளர் பட்டியல் விண்ணப்பத்தை பெற்று வாக்குச்சாவடி அலுவலர்களிடம் சமர்ப்பிக்காதவர்கள் படிவம் 6ஐ பெற்று மீண்டும் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாட்டில்
97,37,832 (15.18%)
வாக்காளர்கள் நீக்கம்
இறந்தவர்கள்
26,94,672
இடம்பெயர்ந்தவர்கள்
66,44,818
இரட்டை வாக்குகள்
3,39,278
அதிகபட்சமாக
சென்னை மாவட்டத்தில்
14,25,018
பெயர்கள் நீக்கம்
குறைந்தபட்சமாக
அரியலூர் மாவட்டத்தில்
24,368
பெயர்கள் நீக்கம்
* பெயர் உள்ளதா என்பதை சரிபார்ப்பது எப்படி?
வாக்காளர்கள் voters.eci.gov.in அல்லது electoralsearch.eci.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும். உங்கள் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) எண்ணை உள்ளிடவும். உங்கள் பெயர், வயது மற்றும் தொகுதி போன்ற தனிப்பட்ட விவரங்களையும் உள்ளிடலாம். பின்னர் ‘தேடல்’ பொத்தானை அழுத்தி உங்கள் வாக்காளர் விவரங்களைக் காணலாம். இதில் உங்கள் பெயர் இருந்தால், வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருப்பதை நீங்கள் உறுதிசெய்து கொள்ளலாம்.
* மீண்டும் விண்ணப்பிக்கலாம்
வரைவு வாக்காளர் பட்டியல் இறுதி பட்டியல் அல்ல. இதில் பெயர் இல்லாதவர்கள் கவலைப்பட வேண்டாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பெயர் தவறுதலாக நீக்கப்பட்டவர்கள், அல்லது விவரங்களில் திருத்தம் தேவைப்படுவோர், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து ஆட்சேபனை தெரிவிக்க முடியும். பிறகு பரிசீலனை செய்து, தகுதியானவர்களின் பெயர் மீண்டும் சேர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, வரைவு பட்டியல் வெளியீடு வாக்காளர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. தங்கள் வாக்குரிமை பாதுகாக்கப்பட வேண்டுமெனில், ஒவ்வொரு வாக்காளரும் தங்களின் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்து, தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வது அவசியமாகிறது.
* பெயர் இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களுக்கு மீண்டும் பெயர் சேர்க்க மற்றொரு வாய்ப்பும் உள்ளது. புதிய வாக்காளர் விண்ணப்பத்திற்கு படிவம் 6-ஐ பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு ஜனவரி 18ம்தேதி வரை அவகாசம் உள்ளது. வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் இரண்டுக்கும் விண்ணப்பிக்க முடியும். பட்டியலில் உள்ள பெயர்களுக்கு மறுப்பு தெரிவித்தும் புகார் அளிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தங்களை மேற்கொள்ளவும் மேலும் ஒரு மாத கால அளவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. ஜனவரி 18க்குப் பிறகு இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும். அதன்படி, தகுதியான வாக்காளர்களை பட்டியல் சேர்க்கப்படுவார்கள். பின்னர், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதம் 17ம் தேதி வெளியிடப்படும். இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே 2026 சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
* முதல்வர் தொகுதியில் ஒரு லட்சம் பேர் நீக்கம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,03,812 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கொளத்தூரில் எஸ்ஐஆர் பணிகளுக்கு முன்பு 2,90,653 வாக்காளர்கள் இருந்தனர். இப்போது அங்கு 1,86,841 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். அதாவது அங்கு சுமார் 35.71% வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
* துணை முதல்வர் தொகுதியில் 89,241 பேர் நீக்கம்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொகுதியான சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் மொத்தம் 89,241 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. எஸ்ஐஆர் பணிகளுக்கு முன்பு 2,40,087 வாக்காளர்கள் இருந்தனர். இப்போது அங்கு 1,50,846 வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அதாவது 37.17% வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
* தமிழ்நாடு வரைவு வாக்காளர்கள்
6,41,14,587 வாக்காளர்கள் இருந்த நிலையில் எஸ்.ஐ.ஆருக்கு பின் 5,43,76,755 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 26,94,672 வாக்காளர்கள் இறந்தவர்கள், 66,44,881 வாக்காளர்கள் முகவரியில் இல்லாதவர்கள், 3,39,278 வாக்காளர்கள் இரட்டை பதிவுகளாக உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் பெண் வாக்காளர்கள் அதிகம்
தமிழ்நாட்டில் 2,66,63,233 ஆண் வாக்காளர்கள், 2,77,60,332 பெண் வாக்காளர்கள், 7,919 மாற்றுப் பாலினத்தவர்கள், 4,19,355 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர்.
* 3ல் ஒருவரின் வாக்கு பறிப்பு
சென்னையில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப் பிறகு மூன்றில் ஒருவரின் வாக்கு பறிபோனது.
மாவட்டங்கள் எஸ்ஐஆருக்கு முன் எஸ்ஐஆருக்கு பின் நீக்கப்பட்டவர்கள் சதவீதம்
1. அரியலூர் 5,30,890 5,06,522 24,368 4.60%
2. சென்னை 40,04,694 25,79,676 14,25,018 35.5%
3. செங்கல்பட்டு 27,87,362 20,85,491 7,01,871 25.20%
4. கோயம்புத்தூர் 32,25,198 25,74,608 6,50,590 20.1%
5. கடலூர் 21,93,577 19,46,759 2,46,818 11.30%
6. தர்மபுரி 12,85,432 12,03,917 81,515 6.34%
7. திண்டுக்கல் 19,34,447 16,09,553 3,24,894 16.80%
8. ஈரோடு 19,97,189 16,71,760 3,25,429 16.3%
9. காஞ்சிபுரம் 14,01,198 11,26,924 2,74,274 19.6%
10. கள்ளக்குறிச்சி 11,60,607 10,76,278 84,329 7.3%
11. கன்னியாகுமரி 15,92,872 14,39,499 1,53,373 9.6%
12. கரூர் 8,98,362 8,18,672 79,690 8.87%
13. கிருஷ்ணகிரி 16,80,626 15,06,077 1,74,549 10.3%
14. மதுரை 27,40,637 12,01,319 3,80,474 13.9%
15. மயிலாடுதுறை 7,83,500 7,08,122 75,378 9.63%
16. நாகப்பட்டினம் 5,67,730 5,10,392 57,338 10%
17. நாமக்கல் 14,66,660 12,72,954 1,93,706 13.2%
18. பெரம்பலூர் 5,90,490 5,40,942 49,548 9.1%
19. புதுக்கோட்டை 13,94,112 12,54,525 1,39,587 10.17%
20. ராமநாதபுரம் 12,08,690 10,91,326 1,17,364 9.71%
21. ராணிப்பேட்டை 10,57,700 9,12,543 1,45,157 13.7%
22. சேலம் 30,30,537 26,68,108 3,62,429 11.95%
23. சிவகங்கை 12,29,933 10,79,105 1,50,828 12.26%
24. தென்காசி 13,75,091 12,25,797 1,51,902 10.8%
25. தஞ்சாவூர் 20,98,561 18,92,058 2,06,503 9.84%
26. நீலகிரி 5,89,167 5,33,076 56,091 9.5%
27. தேனி 12,56,042 11,30,303 1,25,739 11.12%
28. தூத்துக்குடி 14,90,685 13,28,158 1,62,527 10.90%
29. திருச்சி 23,68,967 20,37,180 3,31,787 14%
30. திருநெல்வேலி 14,18,325 12,02,865 2,15,460 15.1%
31. திருப்பத்தூர் 9,99,411 882672 1,16,739 11.68%
32. திருப்பூர் 24,44,929 18,81,144 5,63,785 23.10%
33. திருவள்ளூர் 35,82,226 29,62,449 6,19,777 17.30%
34. திருவண்ணாமலை 21,21,902 18,70,740 2,51,162 11.84%
35. திருவாரூர் 10,75,577 9,46,097 1,29,480 12%
36. வேலூர் 13,03,030 10,88,005 2,15,025 16.5%
37. விழுப்புரம் 17,27,490 15,44,625 1,82,865 10.58%
38. விருதுநகர் 16,26,485 14,36,521 1,89,964 11.67%
* சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிக வாக்காளர்கள் நீக்கம்
தமிழகத்தின் மிகப்பெரிய தொகுதியான சோழிங்கநல்லூரில் 2,18,444 பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி எஸ்.ஐ.ஆருக்கு முன் 7,02,450 வாக்காளர்கள் இருந்த நிலையில் எஸ்.ஐ.ஆருக்கு பிந்தைய வரைவு வாக்காளர் பட்டியலில் 4,84,005 பேர் உள்ளனர்.
* சென்னையில் 14 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
சென்னையில் எஸ்.ஐ.ஆர். பணிகள் மூலம் 14,25,018 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது 35.58 சதவீதம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
