மதுரை: திண்டுக்கல் அருகே மண்டு கருப்பண்ணசாமி கோயிலை திறந்து பூஜைகள் செய்யவும், கார்த்திகை தீபம் ஏற்றவும் அனுமதி வழங்கிய ஐகோர்ட் கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த சித்திரபால்ராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில், திண்டுக்கல், பெருமாள் கோவில்பட்டி கிராமத்தில் உள்ள மண்டு கருப்பண்ணசாமி கோயிலை திறந்து பூஜைகள் செய்யவும், கார்த்திகை தீபத்தை ஏற்றவும் அனுமதி வழங்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கோயிலை திறந்து பூஜைகள் செய்யவும், கார்த்திகை தீபத்தை ஏற்றவும் அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சித்திரபால்ராஜ் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திண்டுக்கல் கலெக்டர், திண்டுக்கல் எஸ்பி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்கக் கோரி அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும், இதுதொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திண்டுக்கல் கலெக்டர், எஸ்பி நேரில் ஆஜராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
