சென்னை: வக்பு மற்றும் அதன் சொத்துகளின் விவரங்களை உமீத் தரவுத்தளத்தில் பதிவேற்றம் செய்ய மேலும் 6 மாத கால அவகாசம் நீட்டித்து தமிழ்நாடு வக்பு வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கை: வக்பு நிறுவனங்கள் மற்றும் அதன் சொத்துகளின் விவரங்கள் உமீத் தரவுத்தளத்தில் பதிவேற்றப்பட வேண்டியது உமீத் சட்டம் 1995-ன் படி கட்டாயமாகும். இதற்கான இறுதி நாள் கடந்த 6.12.2025 அன்றுடன் நிறைவடைந்த நிலையில் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சார்பாக உமீத் தரவுத்தளத்தில் பதிவேற்ற கால அவகாசம் கோரி தமிழ்நாடு வக்பு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டதில் 11.12.2025 உத்தரவில் பதிவேற்றம் செய்திட 6 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி வக்பு மற்றும் அதன் சொத்துகளின் விவரங்களை உமீத் தரவுத்தளத்தில் பதிவேற்றம் செய்திட தமிழ்நாட்டிற்கு மீண்டும் அனுமதிக்கப்பட்டு கடைசி நாள் 6.6.2026 என தெரவிக்கப்பட்டுள்ளது. எனவே, வக்பு நிறுவனங்கள் மற்றும் அதன் சொத்துகளை பாதுகாத்து பராமரித்திட தாமதமின்றி உமீத் தரவுத்தளத்தில் ஒரு மாத காலத்திற்குள் பதிவேற்றம் செய்திட வக்பு நிறுவனங்களின் முத்தவல்லி, நிர்வாகக்குழுவினர் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்படி உத்தரவை செயல்படுத்த தவறும், மறுக்கும் முத்தவல்லி, நிர்வாகக் குழுவினர் மீது உமீத் சட்டம் 1995 பிரிவு 61(b)(1A)(V)-ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
