ஓஎன்ஜிசி நிறுவன சொத்துகளை சேதப்படுத்திய வழக்கு பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு; ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில் தமிழக விவசாய சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதிகளில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய் எடுப்பதற்காக ஆழ்துளை கிணறுகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாய சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் திருவாரூர் மாவட்டம், கரியமங்கலத்தில் கடந்த 2015ம் ஆண்டு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்தின் போது, ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சொத்துகள் சேதப்படுத்தியதாக பி.ஆர்.பாண்டியன், பஞ்சாயத்து முன்னாள் தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட 24 பேருக்கு எதிராக விக்கிரபாண்டியம் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த திருவாரூர் அமர்வு நீதிமன்றம், பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வராஜுக்கு தலா 13 ஆண்டுகள் சிறை தண்டனையும், 13 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பையடுத்து, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பி.ஆர்.பாண்டியன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, விவசாயி என்ற முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 13 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 22 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் இருவர் மட்டும் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்று வாதிட்டார். இதனையடுத்து, பி.ஆர்.பாண்டியன், செல்வராஜ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து நீதிபதி சுந்தர் மோகன் உத்தரவிட்டார்.

Related Stories: