வரலாற்றை திரிக்கும் முயற்சி இல்லாத நதியை கண்டுபிடித்த ஆளுநர்: போராட்டம் நடத்தியவர்கள் கைது

கோவை: கோவை தனியார் கல்லூரி மற்றும் தென்னிந்திய ஆய்வு மையம் இணைந்து சிந்து சரஸ்வதி நாகரிகம், சிந்துநதி முதல் தாமிரபரணி வரை – நம்பிக்கை மற்றும் நாகரிகத்தின் நோக்கம் என்ற பொருளில் 2 நாள் பன்னாட்டுக் கருத்தரங்கை நடத்துகிறது. இதன் தொடக்க விழா நேற்று காலை கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு கவர்னர் ஆர்.என் ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். தொடர்ந்து விழா மலரை வெளியிட்டார்.

அப்போது அவர் பேசுகையில், ‘சரஸ்வதி நதியைப் பற்றி ரிக் வேதம் குறிப்பிடுகிறது. இந்த நதி தனித்துவம் வாய்ந்தது. சரஸ்வதி நதி பற்றிய செய்திகள் புராணமல்ல, அறிவியல் ரீதியாக சரஸ்வதி நதி இருந்தது உறுதியாகியுள்ளது. மகாபாரதத்தில் அந்த நதியைக் குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன. சரஸ்வதி நதிக்கரை உலகத்திற்கான அமைதியை வலியுறுத்துகிறது. ஆனால் இன்று ஒருவருக்கொருவர் போட்டி, சண்டை போன்றவைகள் அதிகரித்து வருகின்றது’ என்றார்.

கோவை தனியார் கல்லூரி சார்பில் நடைபெறும் சரஸ்வதி நாகரிகம் குறித்த கருத்தரங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் அனைத்து முற்போக்கு அமைப்பினர் சிவானந்தா காலனி பகுதியில் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சிந்து சமவெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என மாற்றிப் பெயரிட்டு, வரலாற்றை திரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சாட்டினர். போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்பட 90 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: