அமெரிக்காவில் இந்திய மாணவனை தாக்கி சிறை வைப்பு: இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 பேர் கைது

வாஷிங்டன்: அமெரிக்காவில் படிக்க சென்ற இந்திய மாணவரை கடுமையாக தாக்கி, வீட்டில் சிறை வைத்த இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அமெரிக்காவின் ரோல்லாவில் உள்ள மிசோரி பல்கலை கழகத்தில் படிப்பதற்காக கடந்த ஆண்டு அமெரிக்கா சென்ற 20 வயது மாணவர் ஒருவர் அவரது உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். அப்போது அந்த உறவினர் தன் வீட்டிலும், தனக்கு தெரிந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 பேரின் வீடுகளிலும் வீட்டு வேலைகளை செய்யும்படி மாணவரை கட்டாப்படுத்தி உள்ளனர். அவ்வாறு வேலை செய்யும்போது சரியாக செய்யவில்லை என கூறி, மாணவரை 3 பேரும் கடுமையாக தாக்கி உள்ளனர்.

கைகளாலும், மின்சார ஒயர், பிவிசி குழாய்களை பயன்படுத்தியும் மாணவரை கடுமையாக தாக்குவதுடன், கால்களாலும் உதைத்துள்ளனர். மேலும் சாப்பாடு தராமல் பூட்டிய அறைக்குள் மாணவரை சிறை வைத்துள்ளனர். கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக மாணவரை 3 பேரும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதுகுறித்து தெரிந்த அக்கம்பக்கத்திலுள்ள சிலர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து செயின்ட் சார்லஸ் கவுன்டி பகுதியில் ஒரு வீட்டில் தங்கியிருந்த வெங்கடேஷ் ஆர். சத்தாரு, ஸ்ரவன் வர்மா பெனுமேட்சா, நிகில் வர்மா பெனுமேட்சா ஆகிய 3 பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்கள் மீது மனிதர்களை கடத்துதல், கடுமையாக தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post அமெரிக்காவில் இந்திய மாணவனை தாக்கி சிறை வைப்பு: இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: