சென்னை: தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வர்கள் ஜூலை 28ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தொழில்நுட்பக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளுக்காக கடந்த ஜூலை 1ம் தேதி முதல் தேர்வர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகள் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில், ஆண்டுக்கு 2 தடவை (பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதம்) நடத்தப்படுகின்றன. அதன்படி, ஆகஸ்ட் மாத தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக, தொழில்நுட்பக் கல்வி ஆணையரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறியதாவது; ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளில் கலந்துகொள்ள விரும்புவோர் www.dte.tn.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வரும் 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இணைய விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய விரும்பினால் ஜூலை 30ம் தேதி முதல் ஆக.1ம் தேதி வரை திருத்தம் செய்து கொள்ளலாம். புதுமுக இளநிலை, இளநிலை தேர்வுக்கு ரூ.100ம், இடைநிலை தேர்வுக்கு ரூ.120ம், முதுநிலை தேர்வுக்கு ரூ.130ம், உயர் வேகம் தேர்வுக்கு ரூ.200ம் தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
The post தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வு: 28ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தல்! appeared first on Dinakaran.
