திருவள்ளூரில் களைகட்டிய எருமைத் திருவிழா

உழவர்கள் மற்றும் உழவுத்தொழிலைச் சார்ந்தவர்களுக்கு எப்போதும் கை கொடுக்கும் தோழனாய் விளங்குவது கால்நடைகள்தான். இதனால் கால்நடைகளை ஏழைகளின் ஏடிஎம் என்று கூட சொல்வது உண்டு. விவசாயம் கூட சில சமயங்களில் பொய்த்துவிடும். ஆனால் கால்நடை வளர்ப்பு அப்படியல்ல. ஏதாவது ஒரு வகையில் நமக்கும் லாபத்தைக் கொடுத்துவிடும். இதனால் கால்நடை வளர்ப்பை அரசு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது.

அதன்படி கடந்த வாரம் 14 மற்றும் 15 தேதிகளில் எருமை மாடு வளர்ப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் எருமைத்திருவிழா நடத்தப்பட்டது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் அங்கமான கோடுவெளி, அலமாதி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த இத்திருவிழாவில் எருமை பராமரிப்பு கருத்தரங்கம், பயிற்சி, கண்காட்சி, சிறந்த எருமைகளுக்கான போட்டி என பல்வேறு நிகழ்ச்சிகள் களைகட்டின. இதில் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் திரளாக கலந்துகொண்டு தங்களின் எருமை மற்றும் கன்றுகளை காட்சிப்படுத்தினர்.

இந்தத் திருவிழாவில் எருமை மாடுகள் வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும், எருமை இனத்தைப் பெருக்கும் வழிமுறைகளைப் பற்றியும் வந்திருந்த கால்நடை மருத்துவர்கள் பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர். முக்கியமாக, எருமைக் கன்றுகள் இறப்பின் விகிதத்தை குறைக்கும் வகையிலான பராமரிப்பைப் பற்றியும், எருமைக் கன்றுகள் இறப்பைத் தடுக்கும் களப்பெட்டி பற்றியும் விவசாயிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல், அறிவியல் முறைப்படி எருமை மாடுகளை எப்படி வளர்க்க வேண்டும்? வெப்ப அயர்ச்சியை எப்படி கட்டுப்படுத்த வேண்டும்? எருமைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் தீவனங்கள் எந்த முறையில் கொடுக்கலாம்? போன்ற கேள்விகளுக்கு கால்நடை மருத்துவ வல்லுநர்கள் விளக்கமாக பதில் அளித்தனர். வட மாநிலங்களில் அனைத்து பருவநிலைக்கும் ஏற்ப எருமை மாடுகளை எப்படி பராமரித்து பால் உற்பத்தியை பெருக்குகிறார்கள் என உள்ளூர் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அதேபோல, எருமைப்பாலில் எந்த வகையான மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கலாமென ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

இந்தத் திருவிழாவில் எருமை மாடு பராமரிப்பு, எருமைக்கன்றுகள் அணிவகுப்பு போன்ற போட்டிகள் நடைபெற்றன. சிறந்த எருமைகளை பராமரித்து வரும் விவசாயிகளுக்கு பால் குடுவை, பால் கொள்கலன்கள் என பரிசுகள் வழங்கப்பட்டது. எருமை மாடு வளர்ப்புக்குத் தேவையான 13 வகையான தீவனப் பயிர்களின் விதைகள் கொடுக்கப்பட்டு கால்நடைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து மருந்துகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திருவிழாக்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற வேண்டும். அப்போதுதான் ஏனைய விவசாயிகளுக்கும் மற்ற கால்நடை பராமரிப்பு குறித்து தெளிவு கிடைக்கும் என வந்திருந்த விவசாயிகள் தெரிவித்தனர்.

The post திருவள்ளூரில் களைகட்டிய எருமைத் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: