பயிற்சி என்பது மிகவும் பயனுள்ள கருவி: பொறியாளர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை

சென்னை: சென்னை, கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு புதியதாக பணியில் சேர்ந்துள்ள உதவிப் பொறியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெற்ற இளநிலைப் பொறியாளர்களுக்கு அடித்தளப் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது : பயிற்சி என்பது மிகவும் பயனுள்ள கருவியாகும்.

நெடுஞ்சாலைத் துறையில் ‌பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்‌ என்று, தேர்ந்தெடுக்கப்பட்ட நவீன வசதிகளுடன்‌ நெடுஞ்சாலைத்துறைப்‌ பயிற்சி மையம்‌ அமைந்துள்ளது. அந்த வசதிகளை‌ பயன்படுத்தி நெடுஞ்சாலைதுறை‌ பொறியாளர்களுக்கு பல்வேறு தலைப்புகளில்‌ பயிற்சிகள்‌ வழங்கப்படுகின்றன. 2023-24ம் ஆண்டில், 1,150 பொறியாளர்களுக்கும், 646 தொழில்நுட்பம் சாராத அலுவலர்களுக்கும், பல்வேறு தலைப்புகளில் பயிற்சித்திட்டத்தின்படி, பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 15 துணை ஆட்சியர்களுக்கும், தலைமை செயலகத்தின் 110 பிரிவில் உள்ள 24 அலுவலர்களுக்கும் பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன. 2024-25ம் ஆண்டில், இதுவரை 108 பொறியாளர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து பயிற்சிகளின் போதும், காலை வேளையில் யோகா மற்றும் தியான வகுப்புகள், சிறந்த யோகா ஆசிரியர்களால் மனதும்-உடலும் சிறக்க வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இவ்வாறு நன்கு ஆலோசித்து உருவாக்கப்பட்டுள்ள பயிற்சி வகுப்புகளை துறையில் புதிதாக இணைந்துள்ள பொறியாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பயிற்சி வகுப்புத் தொடக்க விழாவில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு சாலை மேம்பாட்டின் திட்ட இயக்குநர் செல்வராஜ், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் சேகர், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் சந்திரசேகர், தலைமைப் பொறியாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post பயிற்சி என்பது மிகவும் பயனுள்ள கருவி: பொறியாளர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: