திருப்பதி கோயிலில் இன்று ரத சப்தமி உற்சவம் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி: `கோவிந்தா, கோபாலா’ என பக்தர்கள் முழக்கம்

 


திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத சப்தமியையொட்டி இன்று ஒரேநாளில் 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி வலம் வருகிறார். முதல் உற்சவமாக அதிகாலையில் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ நாட்களில் நடைபெறும் 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி ரதசப்தமி நாளான இன்று ஒரேநாளில் அடுத்தடுத்து வீதி உலா நடைபெறுகிறது. கி.பி.1564ம் ஆண்டு முதல் ஏழுமலையான் கோயிலில் ரதசப்தமி உற்சவம் நடத்தப்பட்டு வருவதாக கல்வெட்டுக்கள் மற்றும் வரலாற்று சான்றுகள் உள்ளன.

தை மாத அமாவாசைக்குப்பின் 7வது நாளில் வரும் சப்தமி திதியே ‘ரத சப்தமி’ (சூரிய ஜெயந்தி) என அழைக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் இருந்து சூரியன் உத்தராயனத்தில் ஆரம்பமாகி தன் ஒளிக்கதிர்களுக்கு சூரியன் வெப்பத்தை கூட்டுவதாக சாஸ்திரத்தின்படி கூறப்படுகிறது. சூரியன் பெருமாளின் அம்சம் என்பதால் வைணவ கோயில்களில் ஆண்டுதோறும் ரத சப்தமி வைபவம் சிறப்பாக நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத சப்தமி இன்று அதிகாலை முதல் நடந்து வருகிறது. அதிகாலை 5.30 மணிக்கு வாகன மண்டபத்தில் ஊர்வலமாக 7 குதிரைகளுடன் கூடிய சூரிய பிரபை வாகனத்தை அருணன் தேர் ஓட்டியாக வர, மலையப்ப சுவாமி சிவப்பு மாலையும், பட்டு வஸ்திரமும் உடுத்தி தங்க, வைர ஆபரணங்கள் அணிந்து சூரிய பிரபை வாகனத்தில் 4 மாடவீதிகளில் பவனி வந்தார்.

அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா, கோபாலா’ என பக்தியுடன் தரிசனம் செய்தனர். மாடவீதியில் பவனி வந்த மலையப்ப சுவாமி வடமேற்கு மாடவீதியில் வந்தபோது சூரிய உதயத்திற்காக சிறிது நேரம் காத்திருந்தார். காலை 6.50 மணிக்கு சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது விழுந்த பின்னர் சூரியனுக்கும், மலையப்ப சுவாமிக்கும் சிறப்பு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. பின்னர் ஊர்வலமாக வாகன மண்டபத்திற்கு சுவாமி எழுந்தருளினார். சூர்ய பிரபை வாகனத்தில் சுவாமி வீதி உலாவின்போது தேவஸ்தானம் சார்பில் நடத்தப்படும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலமந்திரம் (அனாதை இல்லத்தில்) இருந்து வரவழைத்த மாணவ, மாணவிகள் வடமேற்கு மாடவீதியில் ஆதித்ய ஹிருதயம் ஸ்லோக பாராயணம் செய்தது பக்தர்கள் அனைவரையும் கவர்ந்தது. மேலும் பல்வேறு மாநிலங்களில் இருந்த வந்த பக்தர்களின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து காலை சுமார் 9 மணியளவில் சின்ன சேஷ வாகனம், 11 மணியளவில் கருட வாகனம், 1 மணியளவில் அனுமந்த வாகனங்களில் சுவாமி உலா நடந்தது. பிற்பகல் 2 மணிக்கு பிறகு ஏழுமலையான் கோயில் அருகே உள்ள தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராட உள்ளனர். அதை தொடர்ந்து கல்ப விருட்ச வாகனம், சர்வ பூபால வாகனம், இரவு சந்திர பிரபை வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். 7 வாகனங்களில் சுவாமி வீதி உலா வருவதை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் திரண்டுள்ளனர். சுவாமி வீதி உலாவை காண நான்கு மாட வீதி மற்றும் வைகுண்டம் காத்திருப்பு அறையில் இருந்த பக்தர்களுக்கு பால், காபி, மோர் அன்னப்பிரசாதம் ஆகியவை சுழற்சி முறையில் தொடர்ந்து வழங்கப்பட்டது. ஆங்காங்கே சிறப்பு மருத்துவ முகாம்களுக்கும் தேவஸ்தானம் ஏற்பாடு செய்திருந்தது.

The post திருப்பதி கோயிலில் இன்று ரத சப்தமி உற்சவம் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி: `கோவிந்தா, கோபாலா’ என பக்தர்கள் முழக்கம் appeared first on Dinakaran.

Related Stories: