தூத்துக்குடியில் உப்பு ஆலையில் 4 நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி தவித்த வட மாநில தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு..!!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உப்பு ஆலையில் 4 நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி தவித்த வட மாநில தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். கனமழை, வெள்ளத்தால் தூத்துக்குடி மாவட்டம் புல்லாவெளியில், உப்பு ஆலையில் 4 நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி சிக்கி தவித்த வடமாநில தொழிலாளர்கள் பேரிடர் மீட்பு குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாரெங்கிலும் கடல் போல் காட்சியளிக்கிறது.

குறிப்பாக தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் பல்வேறு உப்பு ஆலைகள் இருக்கின்றன. அதிலும் புல்லாவெளி பகுதியில் உள்ள உப்பு ஆலையில் சுமார் 13 வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதனிடையே கனமழை காரணமாக அவர்கள் உப்பு ஆலைக்குள் சிக்கி உள்ளனர். தங்களுக்கு உதவுமாறு 4 நாட்களாக பல்வேறு வகையில் முயற்சி செய்துள்ளனர். ஆனால் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் யாரும் இல்லாததால் வடமாநில தொழிலாளர்கள் உப்பு ஆலையிலேயே சிக்கி உணவு, தண்ணீர் இன்றி தவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அப்பகுதியில் மீட்பு பணிக்காக பேரிடர் மீட்பு குழுவினர் சென்றுள்ளனர். அச்சமயம் வட மாநில தொழிலாளர்களை அவர்கள் எதார்த்தமாக சந்தித்துள்ளனர். இதை தொடர்ந்து தனி படகு ஒன்றை அமைத்து 13 வட மாநில தொழிலாளர்களையும் பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். முதற்கட்டமாக அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி, உணவுகள் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. 13 பேரும் தற்போது நல்ல நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

The post தூத்துக்குடியில் உப்பு ஆலையில் 4 நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி தவித்த வட மாநில தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: