கொளத்தூர் இரத்த சுத்திகரிப்பு மற்றும் மறுவாழ்வு மையம் மற்றும் பகிர்ந்த பணியிடத்திற்கான கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (31.7.2024) சென்னை, கொளத்தூர், கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் 748 மாணவ, மாணவியர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளையும், 3 உதவிப் பேராசிரியர்கள், ஒரு உடற்கல்வி இயக்குநர், ஒரு கண்காணிப்பாளர் ஆகியோருக்கு பணி நியமன ஆணைகளையும், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் உதவிகள் கோரி மனுக்கள் அளித்த 147 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள், தையல் இயந்திரங்கள் மற்றும் மூக்குக் கண்ணாடிகளையும் வழங்கினார். மேலும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் கொளத்தூரில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரத்த சுத்திகரிப்பு (Dialysis) மற்றும் மறுவாழ்வு மையம் மற்றும் பகிர்ந்த பணியிடத்திற்கான கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளையும், 3 உதவிப் பேராசிரியர்கள், ஒரு உடற்கல்வி இயக்குநர், ஒரு கண்காணிப்பாளர் ஆகியோருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்குதல்
இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாமல் சமூக நோக்கோடு செயல்படும் அறநிலையங்களாகவும் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருக்கோயில்களின் சார்பில் 25 பள்ளிகளும், 10 கல்லூரிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் 22,247 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 2.11.2021 அன்று சென்னை, கொளத்தூரில் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கி வைக்கப்பட்டன. இக்கல்லூரியில் B.Com., B.B.A., B.C.A., B.Sc. Computer Science, B.A., சைவ சித்தாந்தம் ஆகிய 5 பாடப் பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகிறது. இக்கல்லூரி தொடங்கப்பட்ட 2021 ஆம் ஆண்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 240 மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணம் ரூ.10,000 மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கினார். அதனைத் தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டில் 480 மாணவ, மாணவியருக்கும், 2023 ஆம் ஆண்டில் 685 மாணவ, மாணவியருக்கும் கல்விக் கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, நான்காம் ஆண்டாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் இக்கல்லூரியில் பயிலும் 748 மாணவ, மாணவியருக்கு கல்விக் கட்டணம் ரூ.10,000/- மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளையும், இக்கல்லூரிக்கு தொகுப்பூதியத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 3 உதவிப் பேராசிரியர்கள், ஒரு உடற்கல்வி இயக்குநர், ஒரு கண்காணிப்பாளர் ஆகியோருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

அனிதா அச்சீவர்ஸ் அகாடமி மாணவ, மாணவியர்களுக்கு உதவிகள் வழங்குதல்
பெரியார் நகர் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயின்ற 355 மாணவ, மாணவியருக்கு தையல் இயந்திரங்கள், 125 மாணவ, மாணவியருக்கு மடிக்கணினிகள் மற்றும் 1000 பயனாளிகளுக்கு மூக்குக் கண்ணாடிகள் ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்
திரு.வி.க.நகர் மண்டலம், ஜவஹர் நகரில் அமைந்துள்ள கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை, பயனாளிகளுக்கு மருத்துவத் உதவித் தொகை, திருமண உதவித் தொகை, அரவை இயந்திரங்கள், மூன்று சக்கர வண்டிகள், காது கேட்கும் கருவிகள் என மொத்தம் 147 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

கொளத்தூரில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரத்த சுத்திகரிப்பு (Dialysis) மற்றும் மறுவாழ்வு மையம் மற்றும் பகிர்ந்த பணியிடம் கட்டுமானப் பணிகளை பார்வையிடுதல்

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், கொளத்தூர், ஜெகந்நாதன் தெருவில், 17 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அடித்தளம் மற்றும் நான்கு தளங்களுடன் கட்டப்பட்டு வரும் இரத்த சுத்திகரிப்பு மற்றும் மறுவாழ்வு மையக் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த மறுவாழ்வு மையக் கட்டடத்தின் தரைதளத்தில் நியாயவிலைக் கடைகள், இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், மின்தூக்கி மற்றும் வரவேற்பு அறையும், முதல் தளத்தில் 5 ஆலோசனை அறைகள், மருந்தகம், நோயாளிகளுக்கான காத்திருப்புப் பகுதி, நிர்வாகப் பகுதியும், இரண்டாவது தளத்தில் இயன்முறை மருத்துவம் (பிசியோதெரபி), உடற்பயிற்சி கூடம், அல்ட்ராசவுண்ட் மெழுகு சிசிச்சை மற்றும்
3 எலக்ட்ரோதெரபி அறைகள் உள்ளிட்ட உடற் சிகிச்சைக்கான வசதிகள், நடமாடும் எக்ஸ்ரே வசதியும், மூன்றாம் தளத்தில் டயாலிசஸ் சிகிச்சைக்கான அத்தியாவசிய வசதிகள், தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கான
2 தனிப் படுக்கைகள், நோயாளிகளின் சிகிச்சைக்காக 11 படுக்கைகளும், நான்காவது தளத்தில் செயற்கை மூட்டு மையம், நோயாளிகளுக்கு பிரத்யேக செயற்கை உறுப்புகள் பொருத்தும் இடம் ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.

பகிர்ந்த பணியிடம்
அதனைத் தொடர்ந்து, கொளத்தூர், ஜெகந்நாதன் தெருவில் பெருநகர சென்னை மாநகராட்சியால் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு மையத்தில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமமும் இணைந்து 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அடித்தளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட்டு வரும் பகிர்ந்த பணியிடத்திற்கான (Co-working Space) கட்டுமானப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இப்புதிய பகிர்ந்த பணியிடத்தில் 90 இருக்கைகள் கொண்ட நவீன பணியிடம், கூட்டரங்கம், பணியாளர் கலந்துரையாடல் அறைகள், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆலோசனைக் கூடம், உணவு அருந்தும் இடம், ஓய்வறை, வை-பை மற்றும் இணைய வசதி, உடைமைகளை வைப்பதற்கான பாதுகாப்பு வசதிகள், அச்சு மற்றும் ஸ்கேனிங் வசதிகள் போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, அ. வெற்றியழகன், திருவண்ணாமலை ஆதீனம் தவத்திரு பொன்னம்பல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் தவத்திரு ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப. ரங்கநாதன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தர மோகன், இ.ஆ.ப., சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., சி.எம்.டி.ஏ., முதன்மை செயல் அலுவலர் அ.சிவஞானம், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பி.என். ஸ்ரீதர், இ.ஆ.ப,. கண்காணிப்பு அலுவலர் மற்றும் நகர் ஊரமைப்பு இயக்கக இயக்குநர் ப.கணேசன், இ.ஆ.ப., மத்திய வட்டார துணை ஆணையர் கே.ஜெ.பிரவீன் குமார், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் டாக்டர் இரா. சுகுமார், இ.ஆ.ப., மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் விஜயகுமார், இந்து சமய அறநிலையத் துறை பள்ளி மற்றும் கல்லூரி ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், எவர்வின் பள்ளி முதல்வர்
புருஷோத்தமன், அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரிகள் நரேந்திரன் மற்றும் ஹெலன், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கொளத்தூர் இரத்த சுத்திகரிப்பு மற்றும் மறுவாழ்வு மையம் மற்றும் பகிர்ந்த பணியிடத்திற்கான கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: