சுடுமண் உருளை வடிவ குழாய்கள் கண்டுபிடிப்பு

திருப்புவனம்: கீழடி 10ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணாலான உருளை வடிவ குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு 10ம் கட்ட அகழாய்வு பணியினை செய்து வருகிறது. நேற்று கீழடி அகழாய்வுக் குழி ஒன்றில் சுடுமண்ணாலான உருளைவடிவ குழாய்கள் பொருத்திய வடிகால் வெளிப்பட்டுள்ளது. ஆறு உறைகளுடன் காணப்படும் இச்சுடுமண் வடிகாலானது மிக நேர்த்தியாக ஒன்றுக்குள் ஒன்றாக பொருத்தப்பட்ட நிலையில் உள்ளது. ஒரு சுடுமண் உறையின் நீளம் மற்றும் அகலம் முறையே 36 செ.மீ, 18 செ.மீ ஆகும்.

தற்போது வெளிப்படுத்தப்பட்ட வடிகால் சுமார் 174 செ.மீ நீளம் கொண்டுள்ளது. இந்த வடிகால் குழாயின் தொடர்ச்சி அடுத்தக் குழிக்குள்ளும் நீள்கிறது. உருளைக்குழாய் வடிகாலின் தொடர்ச்சி, நீளம் மற்றும் பயன்பாடு பற்றி அறிய அடுத்த குழியை அகழ்ந்து ஆய்வதற்கானப் பணிகளும் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. தமிழரின் பண்பாட்டினையும், தொன்மையையும் உலகறியச் செய்ய தமிழ்நாடு அரசு, தொல்லியல் துறையின் பணி முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலுடன் பீடுநடைபோடுகிறது என தொல்லியல் ஆணையர் சிவானந்தம் தெரிவித்துள்ளார்.

The post சுடுமண் உருளை வடிவ குழாய்கள் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: