கேரளாவில் நிலச்சரிவு, மழைவெள்ளம் எதிரொலி: நெல்லை – பாலக்காடு எக்ஸ்பிரஸ் பகுதி தூரம் ரத்து; திருச்செந்தூர் ரயில் தாமதம்

நெல்ைல: கேரளா வயநாட்டில் நிலச்சரிவு மற்றும் திருச்சூர் மாவட்டத்தில் தண்டவாளங்களில் வெள்ளம் உள்ளிட்ட காரணங்களால் நெல்லை – பாலக்காடு எக்ஸ்பிரஸ் பகுதி தூரம் ரத்து செய்யப்பட்டது. கேரளாவில் தற்போது வரலாறு காணாத மழை கொட்டி வருகிறது. திருச்சூர் மற்றும் வயநாடு பகுதிகளில் விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் காரணமாக அங்கு கடும் மழைப்பொழிவும், அதனால் சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன. வயநாடு அருகே மேப்பாட், சூரல்மலை உள்ளிட்ட இடங்களில் நேற்று அதிகாலை பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவுகளில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. பள்ளிகள், வீடுகள், கடைகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. மண்சரிவில் ஏராளமானோர் சிக்கியிருப்பதாக தகவல்கள் வரத் தொடங்கியுள்ளன. மேலும் திருச்சூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் தண்டவாளங்களிலும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் ரயில்களை இயக்க முடியாத சூழல் நிலவுகிறது.

இதன்காரணமாக நெல்லையில் இருந்து நேற்றுமுன்தினம் இரவில் புறப்பட்டுச் சென்ற பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் (எண்.16791) ஆலுவா ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. வலத்தால் நகர் மற்றும் வடக்கன்சேரி இடையே அதிக மழைநீர் செல்வதால், அதற்கு மேல் ரயில்களால் செல்ல முடியவில்லை. மறுமார்க்கமாக பாலக்காடு – நெல்லை எக்ஸ்பிரஸ் நேற்று ஆலுவாவில் இருந்து மாலை 6.05 மணிக்கு புறப்பட்டு நெல்லை வந்தது. இதுபோல் எர்ணாகுளம் – கண்ணூர் எக்ஸ்பிரஸ் திருச்சூரில் நிறுத்தி வைக்கப்பட்டது. திருவனந்தபுரம் – சொர்ணூர் எக்ஸ்பிரஸ் சாலக்குடியில் நிறுத்தப்பட்டது.

பாலக்காடு மற்றும் கொல்லங்கோடு பகுதிகளில் மழைவெள்ளம் காரணமாக ரயில்களுக்கான எலக்ட்ரிக் வயர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூருக்கு வரவேண்டிய முன்பதிவற்ற எக்ஸ்பிரஸ் நேற்று பாலக்காட்டில் இருந்து புறப்படுவது தாமதமானது. அந்த ரயில் நெல்லை மற்றும் திருச்செந்தூருக்கு தாமதமாக வந்து சேர்ந்தது. இதுபோல் திருவனந்தபுரம் – மதுரை அமிர்தா எக்ஸ்பிரசும் புறப்பட்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது.

ரயில்கள் ரத்து
கேரளாவில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு, தண்டவாளங்களில் தண்ணீர் காரணமாக இருமார்க்கத்திலும் பெங்களூர் – கண்ணனூர் எக்ஸ்பிரஸ், இரு மார்க்கத்திலும் மங்களூரு – விஜயபுரா எக்ஸ்பிரஸ், இரு மார்க்கத்திலும் யஷ்வந்த்பூர் – மங்களூரு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. தென்மாவட்டங்களுக்கு கேரளாவில் இருந்து ரயில்கள் நேற்று சற்று தாமதமாக வந்தன. வெள்ளத்தை வடிய வைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்தாலும், இன்றும் பல ரயில்கள் தாமதமாகவும், சில ரயில்கள் பகுதி தூரம் ரத்து செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

நெல்லை – ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் 4 மணி நேரம் தாமதமாக இயக்கம்
நெல்லையில் இருந்து நேற்று புறப்பட வேண்டிய ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் சுமார் 4 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. நெல்லையிலிருந்து குஜராத்தின் ஜாம்நகர் இடையே வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் (எண்.19577) திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் புறப்பட்டு செல்கிறது. இணை ரயில் வருகை தாமதம் காரணமாக இந்த ரயில் அடிக்கடி தாமதமாக புறப்பட்டுச் செல்வது வாடிக்கையாகி வருகிறது. நேற்று அதிகாலையிலும் 5.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட வேண்டிய ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் குறித்த நேரத்தில் புறப்படவில்லை.
இணை ரயில் வருகை தாமதம் காரணமாக அந்த எக்ஸ்பிரஸ் 3 மணி நேரம் 45 நிமிடங்கள் தாமதமாக நேற்று காலை 9 மணிக்கு நெல்லையில் இருந்து திருவனந்தபுரம் வழியாக ஜாம்நகர் புறப்பட்டுச் சென்றது. அந்த ரயிலை எதிர்பார்த்து நெல்லை ரயில் நிலையத்தில் வெகுநேரம் பயணிகள் காத்துக் கிடந்தனர்.

The post கேரளாவில் நிலச்சரிவு, மழைவெள்ளம் எதிரொலி: நெல்லை – பாலக்காடு எக்ஸ்பிரஸ் பகுதி தூரம் ரத்து; திருச்செந்தூர் ரயில் தாமதம் appeared first on Dinakaran.

Related Stories: