வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 170 ஆக உயர்வு : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 9 தமிழர்கள் உயிரிழந்த சோகம்!!


நீலகிரி: வயநாடு நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 9 தமிழர்களின் உயிரிழந்துள்ளனர். வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 170-ஆக உயர்ந்துள்ளது. முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த காளிதாஸ் என்பவரின் உடல் அவரது சொந்த ஊரான கூடலூர் அருகே குழியம்பாறைக்கு கொண்டுவரப்பட்டது.

32 வயதான இவர் தங்கை திருமணத்தை முடித்த கையோடு தனது திருமணத்திற்காக வீடு கட்ட கடன் வாங்கி இருந்தார். அதனை திருப்பி செலுத்துவதற்காக 4 மாதங்களாக கேரளாவுக்கு கட்டிட வேளைக்கு சென்றிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். காளிதாஸ் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டதும் கதறி அழுத அவரது குடும்பத்தினரை கண்டு அந்த ஊரே சோகத்தில் மூழ்கியது. இதே போல் வயநாட்டின் சூரல் மலை கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் அர்ச்சகராக இருந்த கல்யாண குமாரின் உடலும் அவரது சொந்த ஊரான பந்தலூர் அடுத்துள்ள ஐயன்பள்ளிக்கு கொண்டுவரப்பட்டது.

நிலச்சரிவில் சூரன்மலை சிவன் கோவில் மண்ணில் புதைந்த போது கல்யாண குமார் பாறையில் இடுக்கில் சிக்கி உயிரிழந்தார். இந்த நிலையில், ஏற்கனவே தமிழ்நாட்டை சேர்ந்த 2பேர் நிலச்சரிவில் உயிரிழந்த நிலையில், நீலகிரி மாவட்டம் பந்தலூரைச் சேர்ந்த ஷிஹாப் என்பவர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார். சூரல்மலை பகுதியில் உள்ள பள்ளி வாசலில் ஷிஹாப் மத ஆசிரியராக பணியாற்றி வந்தார். நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கில் பள்ளிவாசல் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டதில் ஷிஹாப் உயிரிழந்தார். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஷிஹாப் உடல் பாறை இடுக்கில் இருந்து மீட்கப்பட்டது. இதை தொடர்ந்து, சூரல்மலையில் தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 தமிழர்கள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 6 பேரும் கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.

 

The post வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 170 ஆக உயர்வு : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 9 தமிழர்கள் உயிரிழந்த சோகம்!! appeared first on Dinakaran.

Related Stories: