ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று திறக்கப்படும்; வேலூர் கோட்டை பெரியார் பூங்கா அருகில் உள்ள காலியிடம் சீரமைப்பு: விஷஜந்துக்களை தடுக்க நடவடிக்கை

வேலூர்: வேலூர் கோட்டை பெரியார் பூங்கா ஆகஸ்ட் 15ம் தேதி மக்களுக்காக திறந்துவிடப்படும் நிலையில், விஷஜந்துக்களை தடுக்க, பூங்காவையொட்டி கோட்டை பின்புறம் உள்ள காலியிட புதர்கள் அகற்றப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளதாக தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் வேலூர் கோட்டை உள்ளது. அதை ஒட்டிய மைதானம், கோட்டை நுழைவுப்பகுதியில் இருபுறமும் உள்ள பூங்காக்கள் பயன்பாட்டில் உள்ளது. அதேநேரத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் நகராட்சி கட்டுப்பாட்டில் இருந்த பெரியார் பூங்கா சிறிய வனவிலங்கு காட்சி தளங்களுடன், குழந்தைகளுக்கான ரயில் உட்பட விளையாட்டு அம்சங்களுடன் அழகிய பூங்காவாக பராமரிக்கப்பட்டு வந்தது. மாலை நேரங்களில் ரேடியோ செய்திகளை கேட்கவும், இளைப்பாறவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரியார் பூங்காவில் கூடுவர்.

இந்த நிலையில் எந்த காரணத்தாலோ வேலூர் நகராட்சி பூங்கா பராமரிப்பை கைவிட்டது. இதனால் அது சமூக விரோதிகளின் பிடியில் சிக்கி சின்னாபின்னமானது. இதையடுத்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தின் அக்கறையின் பேரில் பூங்காவில் பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதேபோல் அகழியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் படகு சவாரியும் விடப்பட்டது. ஆரம்பத்தில் படகு சவாரியை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் மாறி, மாறி கவனித்தன. பின்னர் படகு சவாரியும் காணாமல் போனது. அதேபோல் பூங்காவை பராமரித்து வந்த தனியார் ஒப்பந்தமும் காலாவதியான நிலையில் மீண்டும் பெரியார் பூங்கா கைவிடப்பட்டது.

இந்நிலையில் வேலூர் கோட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அகழி தூர்வாருதல் உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல் பெரியார் பூங்காவையும் மேம்படுத்தி மீண்டும் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இததொடர்பாக மாவட்ட நிர்வாகமும் அடிக்கடி ஆலோசனை கூட்டங்கள் நடத்தியது. அதன் முடிவில் பெரியார் பூங்காவை தொல்லியல் துறையே பராமரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, பெரியார் பூங்காவில் சிறிய அளவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று மக்களுக்காக திறந்துவிடப்படுகிறது.

முன்னதாக இதற்காக கடைசியாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் பெரியார் பூங்கா மக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட உள்ள நிலையில், அதை ஒட்டி கோட்டையின் பின்புறம் உள்ள காலியிடத்தில் உள்ள முட்புதர்களையும், தேவையற்ற மரம், செடி, கொடிகளையும் அகற்றுவதுடன், விஷஜந்துக்கள் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தொல்லியல் துறையிடம் அறிவுறுத்தல் வழங்கியது. அதன்படி, நேற்று கோட்டையின் பின்புறம் பெரியார் பூங்காவை ஒட்டியுள்ள காலியிடத்தில் உள்ள தேவையற்ற முட்புதர்கள், செடி, கொடிகள் அகற்றப்பட்டு அந்த இடம் சமன்படுத்தப்பட்டு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுதொடர்பாக தொல்லியல்துறையின் தோட்டக்கலைத்துறை அலுவலர் பிரசாத்திடம் கேட்டபோது, ‘மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல் பேரில் ஆகஸ்ட் 15ம் தேதி பூங்கா மக்களுக்காக திறந்துவிடப்பட உள்ளது. இதனால் அதை ஒட்டிய காலியிடமும் முட்புதர்கள் அகற்றப்பட்டு, செடி, கொடிகள் அகற்றப்பட்டு தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது’ என்றார்.

The post ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று திறக்கப்படும்; வேலூர் கோட்டை பெரியார் பூங்கா அருகில் உள்ள காலியிடம் சீரமைப்பு: விஷஜந்துக்களை தடுக்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: