பொதுக்கூட்டத்துக்கு 2 ஆயிரம் துணி கொடுத்து ஆட்களை கூட்டும் தேனிக்காரரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தி ருச்சி என்றால் திருப்பம்னு பாடுவாங்க… தேனிக்காரருக்கு திருகு வலியை கொடுத்து இருக்காமே, அப்படியா…’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘திருச்சி மாநாட்டுக்கு பிற மாவட்டங்களில் இருந்து வரும் தொண்டர்கள் கூட்டத்தை காட்டிலும், சொந்த மண்ணான தேனியில் இருந்து அதிகமான அளவில் கூட்டத்தை அழைத்து வரணும்னு மாவட்டத்தில் உள்ள தன் ஆதரவாளர்களிடம் கண்டிப்புடன் சொல்லி இருக்கிறாராம். பிற மாவட்டத்தில் இருந்து அதிகமாக வந்தா, எதிர்காலத்தில் எங்களால் தான் கட்சின்னு யாரும் சொல்லிடக் கூடாதுன்னு பதற்றத்தில் இருக்காராம். இதனால், ஹனிபீ மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து 5 ஆயிரம் பேரையாவது மாநாட்டுக்கு திரட்டணும்னு ஆதரவாளர்களிடம் உத்தரவு போட்டு இருக்கிறாராம். சொந்த ஊரில் செல்வாக்கு உள்ள தலைவராக தன்னை காட்டிக் கொள்ள கரன்சியை கரைக்க முடிவு செய்துள்ளாராம்.

இதற்கு ஆதரவாளர்களோ சென்னையில பொதுக்குழு நடந்தப்போ தேனி மாவட்டத்தில் இருந்துதான் தொண்டர்களை கூட்டிபோனோம். இவர்களுக்கு இன்னைக்கு வரைக்கும் எந்த கவனிப்பும் செய்யல. வழக்கில மாட்டினவங்களையும் காப்பாத்தல. எப்படி மாநாட்டுக்கு கூப்பிடறதுன்னு மறு கேள்வி எழுப்பினாங்களாம். இதனால அப்செட் ஆன சேலம்காரர், சரி, மாநாட்டுக்கு வர்றவங்களுக்கு ஆளுக்கு ரூ.2 ஆயிரம், வேட்டி, சேலை கொடுக்கலாம். எப்படியும் தேனி மாவட்ட மக்கள் 5 ஆயிரம் பேர் இருக்கணும். அவர்களை அழைத்துவர வாகன வாடகை, நிர்வாகிகள் செலவுன்னு ஒரு பெரும் தொகையை கொடுத்து வைச்சிருக்காங்களாம். இதற்கிடையில், 2 வருடமாக ஆட்சி, அதிகாரத்தில் இல்லாத ஆதரவாளர்கள் ஆள்திரட்டுகிறோம்னு பேர்ல இந்தத் தொகையை அமுக்கிடுவாங்களோ என்ற சந்தேகத்துடன் கரன்சியை அள்ளி தருகிறாராம்.

அப்புறம் யப்பா… தேனியில இருந்து சொன்ன மாதிரி அழைத்து வந்துடு… உன்னை இதைவிட நல்லா கவனிக்கிறேன்… கூடுலாக லட்சக்கணக்கில் தர்றேன் என்று பெரிய அளவில் ஐஸ் ைவத்துள்ளாராம். இதுக்காக நம்பிக்கையானவங்க பட்டியல் ஒன்னும் தனியாக தயாராகி வருதாம்… கரன்சி கைமாறி வருதாம்… நாட்களை எண்ணுவதை விட ஆட்களை எண்ண அடிஷனலாக அடிபொடிகளை நியமித்து சாப்பாடு போட்டு வளர்த்து வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘எம்ஜிஆர்., ஜெயலலிதா கையெழுத்து போட்ட அட்டைகளை செல்லாது என பேசிய நபரை பற்றி சொல்லுங்க கேட்போம்…’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கிரிவலம் மாவட்டத்துல கலசமான தொகுதியில இலைகட்சியில புதுசா உறுப்பினர்களை சேர்க்குறது, தண்ணீர் பந்தல் திறக்குற உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கடந்த 2 நாளைக்கு முன்னாடி நடந்துச்சு. இதுல தூசியை அடைமொழியாக கொண்ட மாஜி எம்எல்ஏ கலந்துகிட்டு பேசினாரு. அப்போது அவர், எம்ஜிஆர், ெஜயலலிதா ஆகியோர் பதவி வகிச்சு வந்தாங்க. அவர்களின் கையொப்பமிட்ட உறுப்பினர் அட்டைகள் வைத்திருந்தால், அந்த அட்டைகள் செல்லாது. பொதுச் செயலாளராக தற்போது தேர்வாகியிருக்குற இபிஎஸ் கையொப்பமிட்ட அட்டை வைத்திருந்தால் தான் கட்சியில் பதவி கிடைக்கும்னு சொன்னாராம். எதிர்காலத்துல உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு சங்கங்கள், எம்எல்ஏ, எம்பி உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிடணும்னா, இபிஎஸ் அட்டை தான் அவசியம். ஏற்கனவே உறுப்பினரா இருந்தாலும் மீண்டும் புதுப்பிக்கணும்னு… இந்த தகவலை மேடைக்கு அருகில் இருந்து கேட்ட மூத்த உறுப்பினர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோனாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பணத்தை இறைத்தால் வராத கூட்டமா என இழுக்கும் திட்டம் பற்றி தன் தொண்டர்களுக்கு யாரு ஐடியா சொல்லி கொடுத்தது…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ இலை கட்சியில் தேனிக்காரரின் அணி சார்பில் மலைக்கோட்டை மாநகரில் இந்தமாத இறுதியில் பிரமாண்டமான அளவில் மாநாடு நடக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறதாம். இந்த மாநாடு பொறுப்பு நெற்களஞ்சிய மாவட்ட மாஜி அமைச்சர் ‘வைத்தியானவரிடம்’ ஒப்படைக்கப்பட்டுள்ளதாம். ஆனால்,. ‘வைத்தியானவர்’ எந்தவித பிடியும் கொடுக்காமல் இருந்து வந்ததோடு எந்தவித முயற்சியும் எடுக்காமல் இருந்தாராம். இதனால் உச்சகட்ட டென்ஷனுக்கு சென்ற தேனிக்காரர், மாநாட்டில் பெரிய அளவில் கூட்டத்தை காட்ட வேண்டும் என மாஸ்டர் ப்ளான் போட்டு கொடுத்ததோடு, வைத்தியானவருக்கு அழுத்தம் கொடுத்துள்ளாராம். அத்துடன் கரன்சியும் பெரிய அளவில் கைமாறிய பிறகு வைத்தி அப்படியே மாறிட்டாராம்.

இதனால் டெல்டா மாவட்டத்தில் இருந்து பெரிய அளவில் கூட்டத்தை அழைத்து வருவதற்கான ஸ்கெட்ச்சை தனது ஆதரவாளர்களுக்கு வைத்தியானவர் போட்டு கொடுத்துள்ளாராம். ‘விட்டமின் ப’ கொடுத்தாவது ஆட்களை திரட்டி வரவேண்டும் என முக்கிய நிர்வாகிகளுக்கும் அதிரடியாக உத்தரவு போட்டுள்ளாராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘இலை கட்சியில மாவட்ட அளவுல எங்கே பஞ்சாயத்து நடக்குது…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டத்துல நடக்குற அரசியல் களம் தான் நாளுக்கு நாள், அனல் பறக்குதாம். யாரு, யாரை வீழ்த்துவதுன்னு போய்கிட்டிருக்குதாம் போட்டியாம். கிரிவலம் மாவட்டத்துல எம்எல்ஏவாகவும், மினிஸ்டராகவும் இருந்தவர் சேவூர்காரர். இவரு, அந்த தொகுதியில இருக்குற ஒன்றிய நிர்வாகிகள எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்குறதில்லையாம். அரசு நிகழ்ச்சிக்கும் அழைப்பு விடுக்குறதில்லையாம். நகர நிர்வாகியை மட்டும் அழைக்கிறாராம்.

இதனால, அழைப்புவிடுக்காத ஒன்றியங்கள் சேர்ந்து சேவூர் காரருக்கு எதிராக போர்கொடி தூக்கியிருக்காங்களாம். அடுத்து வர்ற தேர்தல்ல இவருக்கு சீட்டே கிடைக்கக்கூடாதுன்னு அதற்கான பணியில் ஈடுபட்டு வர்றாங்களாம். அவரோ, அரசியல்ல யாரும் வளரக்கூடாது, தன் மகனுக்கு எம்பி சீட்டு வாங்கியே தீரணும்னு அதற்கான பணியில ஈடுபட்டுவர்றாராம்.

எதிர்ப்பு ஒன்றியங்கள் 3 பேரும், கட்சியில நாங்க வாழையடி, வாழையாக உழைச்சி, எம்எல்ஏ, மினிஸ்டர்னு ஆக்கினோம், நாங்க கடைசி வரைக்கு தொண்டனாவே இருக்குறதான்னு செம கடுப்புல இருக்காங்களாம். இதனால சேவூர் காரரை புறக்கணிக்க வடக்கு மாவட்டத்தோட இணைஞ்சிட்டாங்களாம். இப்படி கிரிவலம் வடக்குல ரெண்டு இலையோட கட்சியில ஏகப்பட்ட அரசியல் நடக்குதாம். தலைமையிலத்தான் இலைய பிச்சுகிட்டு முட்டல், மோதல்னு பார்த்தா? மாவட்ட அளவுலயும் முட்டல் மோதலாவே இருக்குதேன்னு தொண்டர்கள் பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.

The post பொதுக்கூட்டத்துக்கு 2 ஆயிரம் துணி கொடுத்து ஆட்களை கூட்டும் தேனிக்காரரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Related Stories: