துயரம் மிகுந்த இந்த சமயத்தில் அரசியல் ஆதாயம் தேடவேண்டாம்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: துயரம் மிகுந்த இந்த சமயத்தில் அரசியல் ஆதாயம் தேடவேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விஷச் சாராய விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது; விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த மிகவும் துயரமான சம்பவம் குறித்து உங்களை போலவே நானும் மிகுந்த வேதனையும் வருத்தமும் அடைகிறேன். விஷச் சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம், சேலம், திருச்சி, செங்கல்பட்டில் இருந்து 57 மருத்துவர்கள் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். எதிர்க்கட்சி தலைவர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்யாமல் தனது கருத்தை தெரிவித்து இருக்கலாம். அவைக்குள் இருந்து கருத்துகளை தெரிவித்திருக்கலாம். அரசியல் காரணங்களுக்காக எடப்பாடி பழனிசாமி வெளியேறிவிட்டார். சிகிச்சைக்கு தேவையான உயிர்காக்கும் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மருந்துகள் தேவைப்பட்டால் வெளிச்சந்தையில் வாங்கி பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட உள்ளது.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் கள்ளக்குறிச்சி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட 164 பேரில் 117 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். விஷச் சாராயம் அருந்தி 47 பேர் உயிரிழந்தனர்; விஷச் சாராயம் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் சம்பவத்தில் காவல்துறையை சேர்ந்த 16 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விஷச் சாராயம் புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. விஷச் சாராயம் விற்றவர்களிடம் இருந்து 200 லிட்டர் மெத்தனால் கைப்பற்றப்பட்டுள்ளது

கடந்த ஆண்டு மே மாதம் நடந்த விஷச் சாராய மரணம் தொடர்பாக 21 பேர் கைதுசெய்யப்பட்டனர், அதில் 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் கள்ளச்சாராயம் தொடர்பாக 4.63 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளது. கள்ளச்சாராயம் விற்றதாக 4,61,084 பேர் கைது செய்யப்பட்டனர்; அவர்களில் 565 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் ஆய்வுசெய்து ஓரிரு நாளில் அறிக்கை தர உத்தரவிட்டுள்ளேன். அறிக்கை கிடைத்தவுடன் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். விஷச் சாராய மரணம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி-க்கு உத்தரவிட்டேன், அதன் அடிப்படையில் விசாரணை தொடங்கியுள்ளது

கள்ளக்குறிச்சிக்கு அமைச்சர்கள் எ.வ.வேலு, உதயநிதி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு அறிவித்த ரூ.10 லட்சம் உடனடியாக வழங்கப்பட்டுள்ளது. விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுடைய குழந்தைகளின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும். பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை பராமரிப்பு செலவுக்காக மாதம் ரூ.5,000 வழங்கப்படும். பெற்றோரை இழந்த குழந்தைகளின் உயர்கல்வி வரை அவர்களது கல்விச் செலவை அரசே ஏற்றுக் கொள்ளும்.

பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு முடியும் வரை கல்வி கட்டணம், விடுதி கட்டணத்தை அரசே ஏற்கும். பெற்றோரை இழந்த குழந்தைகள், அவர்களின் விருப்பத்தின்பேரில் அரசு விடுதிகளில் சேர்க்கப்படுவார்கள். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்க கூடுதல் நிதி அளிக்கப்படும். பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் வங்கியில் டெபாசிட் செய்யப்படும். குழந்தைகள் 18 வயது நிறைவடைந்தவுடன் வட்டியுடன் ரூ.5 லட்சம் வழங்கப்படும். பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும்.

பெற்றோரில் ஒருவரையோ இருவரையோ இழந்து வாடும் குழந்தைகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளிலும் முன்னுரிமை வழங்கப்படும். நான் ஓடி ஒளிபவன் அல்ல; எதையும் எதிர்கொள்பவன். பொறுப்பை உணர்ந்த காரணத்தினால் தான் குற்றவாளிகளை கைது செய்து விட்டு பொறுப்போடு பதில் அளிக்கிறேன். துயரம் மிகுந்த இந்த சமயத்தில் அரசியல் ஆதாயம் தேடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.

The post துயரம் மிகுந்த இந்த சமயத்தில் அரசியல் ஆதாயம் தேடவேண்டாம்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Related Stories: