பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்: த.வெ.க. தலைவர் விஜய் வேண்டுகோள்

சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய்யின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என விஜய் கேட்டுக்கொண்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் தற்போதும் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்துக்கு அரசியல் கட்சியினர் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கள்ளக்குறிச்சியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்தநிலையில் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என தொண்டர்களுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதவில்; தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து தமிழக வெற்றிக்கழக மாவட்ட நிர்வாகிகளுக்கும் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

எனவே விஜய்யின் உத்தரவின்படி, கழக நிர்வாகிகள், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை உடனடியாகச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

The post பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்: த.வெ.க. தலைவர் விஜய் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: