மணிப்பூரில் மீண்டும் பதற்றம் அதிகரிப்பு: செப்.15-ம் தேதி வரை இணைய சேவை முடக்கம்

இம்பால்: செப்.15-ம் தேதி வரை மணிப்பூர் முழுவதும் இணைய சேவை முடக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மணிப்பூரில் மெய்தீஸ் மற்றும் குக்கி இன மக்களிடையே வெடித்த மோதல், 16 மாதங்களை கடந்தும் தொடர்கிறது. இருதரப்பு மோதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் இயல்புநிலை திரும்பியுள்ளதாக ஆளும் பாஜக அரசு தெரிவித்தாலும், இருதரப்பு மோதல்களால் உயிரிழப்பு நிகழ்ந்து கொண்டே உள்ளது.

உருட்டை கட்டைகள், துப்பாக்கிகளை கொண்டு தாக்கிக் கொண்ட நிலையில், தற்போது ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் டிரோன்களை கொண்டு தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இதனால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதோடு, பொதுமக்களிடையே அச்சமும் நிலவுகிறது. பதற்றத்துக்கு மத்தியில் மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் மாணவர்கள் ஆவேசப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2-வது நாளாக மணிப்பூர் ஆளுநர் மாளிகையை நோக்கி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். மாணவர்களை போலீசார், பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மாணவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசி பாதுகாப்புப் படை விரட்டியடித்தது. மணிப்பூரில் இருந்து மத்திய பாதுகாப்புப் படையினர் வெளியேற வலியுறுத்தி ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் தீவிரமடைந்து வருவதால் மணிப்பூரில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதற்றம் காரணமாக இம்பால் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செப்.15-ம் தேதி வரை மணிப்பூர் முழுவதும் இணைய சேவையும் முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

The post மணிப்பூரில் மீண்டும் பதற்றம் அதிகரிப்பு: செப்.15-ம் தேதி வரை இணைய சேவை முடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: