தஞ்சை மாணவி மரண விவகாரம்: தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு

புதுடெல்லி: தஞ்சை மாணவி மரண விசயம் தொடர்பாக, தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், பாஜக மூத்த தலைவருமான அஸ்வினி குமார் உபாத்யாயா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘மனிதாபிமான உதவி, பொருளாதார உதவி, பரிசு பொருட்களை வழங்கி ஏமாற்றி மத மாற்றம் நடைபெறுகிறது. மிரட்டி, கட்டாயப்படுத்தியும் மதமாற்றம் நடைபெறுகிறது. இவற்றை தடுக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இதுதொடர்பாக ஒன்றிய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளும் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு வழக்கறிஞர் வில்சன் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘மதம் என்பது சுதந்திரமானது. எந்த மதத்தை பின்பற்றுவது என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை. அதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது. மனுதாரர் பாஜக பின்புலம் கொண்டவர். இவ்விவகாரம் தொடர்பாக அவர் தாக்கல் செய்த 4 மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

மதம் சார்ந்த விஷயங்களில் மாநிலங்களுக்கு அதிகாரமில்லை. தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் இல்லை. நாட்டுக்கே முன்னுதாரணமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கட்டாய மதமாற்ற சட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் அதனை திரும்பப் பெற்றார். இதுபோன்ற செயல்கள் மதம் சார்ந்தவர்களை புண்படுத்துகிறது. தஞ்சை மாணவி மரண விவகாரத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை. தமிழ்நாட்டின் மீது அவதூறு தெரிவிக்கும் வகையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதம் சார்ந்த விசயங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. நாடாளுமன்றத்திற்கு தான் அதிகாரம் உள்ளது. எனவே மனுதாரரின் மனுவில் முகாந்திரம் இல்லாததால் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் மனுதாரர் மீது பல கிரிமினல் வழக்குகள் உள்ளதால், அவர் பொது நல மனுதாக்கல் செய்ய தகுதியற்றவர் ஆவார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தஞ்சை மாணவி மரண விவகாரம்: தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு appeared first on Dinakaran.

Related Stories: