2 ஆண்டுகளில் கண்ணாடி மது பாட்டிலை திரும்ப பெறும் திட்டம் தமிழ்நாட்டில் விரைவில் டெட்ரா பேக்கில் மது விற்பனை? ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் மதுபானங்களை கண்ணாடி பாட்டில்களில் அடைப்பதற்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்ய திட்டம் வகுக்கப்பட உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை உள்ளிட்ட மலைபிரதேச மாவட்டங்களில் மது சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாதவாறு டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யும் பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த திட்டம் முதல்கட்டமாக நீலகிரி, கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்துவது குறித்த விவரத்தை தெரிவிக்குமாறு டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி வி.எஸ்.கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். அறிக்கையில், விற்பனை செய்யும் மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் கோவை, நீலகிரி, பெரம்பலூர் மாவட்டங்களில் சராசரியாக விற்பனையாகும் மது பாட்டில்களில் 95% காலி பாட்டில்கள் கடைகளுக்கு திரும்ப வருகின்றன.

மீதமுள்ள 5% பாட்டில்கள் விற்பனையில் வந்த ரூ.1 கோடியே 35 லட்சத்து 75,173 நிலுவை தொகையை கடைகளுக்கு திரும்ப வரும் பாட்டில்களை சேகரித்து வைக்கும் இடங்களை அமைக்க பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் இந்த குடோன்கள் இல்லாததால் பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடைகளுக்கு திரும்ப வரும் காலி மதுபாட்டில்களை வாங்குவதற்கு பல நிறுவனங்கள் முன் வந்துள்ளன. அதற்கான டெண்டரும் விடப்பட்டுள்ளது. மது பானங்களை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்வதற்கு பதில் மாற்று ஏற்பாடு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 4,829 டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் கோவை, நீலகிரி, பெரம்பலூர் மாவட்டங்கள் நீங்கலாக 4,397 கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப ெபறும் திட்டம் செயல்படவுள்ளது. இதில் 471 கடைகளில் மட்டுமே காலி பாட்டில்களை சேகரித்து வைக்க இடம் உள்ளது. மீதமுள்ள 3,926 கடைகளில் காலி பாட்டில்களை சேகரித்துவைக்க இடமில்லை. இந்த திட்டத்தை மேலும் 10 மாவட்டங்களில் அடுத்த 12 மாதங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு மேலும் 10 மாவட்டங்களில் 18 மாதங்களிலும், மீதமுள்ள மாவட்டங்களில் 24 மாதங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை 2 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் செயல்படுத்த கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post 2 ஆண்டுகளில் கண்ணாடி மது பாட்டிலை திரும்ப பெறும் திட்டம் தமிழ்நாட்டில் விரைவில் டெட்ரா பேக்கில் மது விற்பனை? ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: