தமிழகத்தை மிரட்டும் கனமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த 15 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை கடிதம்..!!

சென்னை: தமிழகத்தில் கனமழையையடுத்து 15 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மைத்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார். தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று டிசம்பர் 2ம் தேதி புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, வட இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், டிசம்பர் 5ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், டிசம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 15 மாவட்டங்களில் மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 14 கடலோர மாவட்டங்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. வங்கக்கடலில் புயல் உருவாவதால் கடலோர மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடலுக்குள் சென்ற மீனவர்கள் கரை திரும்புவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் குறித்தும், மழைநீர் வடிகால் பணிகளை முறையாக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பழைய கட்டடங்களை ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.

The post தமிழகத்தை மிரட்டும் கனமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த 15 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை கடிதம்..!! appeared first on Dinakaran.

Related Stories: