தாம்பரம் ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர், டிக்கெட் பரிசோதகர் கட்டிப்புரண்டதால் பரபரப்பு

தாம்பரம்: சென்னை கடற்கரையில் இருந்து மின்சார ரயில் நேற்று முன்தினம் தாம்பரம் ரயில் நிலையத்தின் 3வது நடைமேஐயில் வந்து நின்றது. ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் வழக்கம்போல் நடைமேம்பாலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, வடமாநில வாலிபர் ஒருவர் மின்சார ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் இருந்து இறங்கினார். இதனைக் கண்ட பெண் டிக்கெட் பரிசோதகர் அந்த நபரின் டிக்கெட்டை சோதனை செய்தபோது, இரண்டாம் வகுப்பு டிக்கெட் வைத்துக்கொண்டு முதல் வகுப்பு ரயில் பெட்டியில் பயணம் செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து, அந்த வாலிபரிடம் அபராத தொகை செலுத்துமாறு பெண் டிக்கெட் பரிசோதகர் கூறியுள்ளார். அப்போது, வடமாநில வாலிபர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றாராம். இதனைக் கண்ட சக ரயில்வே அதிகாரிகள் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தபோது, ரயில்வே அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ரயில்வே அதிகாரிகள் மற்றும் வடமாநில வாலிபர் ஆகியோர் திடீரென்று சண்டையிட்டு நடைமேம்பாலத்தில் கட்டிப்பிடித்து உருண்டனர்.

இதனைக் கண்ட ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்து, ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் இருவரையும் சமாதானம் செய்தனர். மேலும், வடமாநில வாலிபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், தவறுதலாக முதல் வகுப்பு பெட்டியில் ஏறியதாக தெரிவித்த வடமாநில வாலிபர் ரயில்வே அதிகாரிகளிடம் மன்னிப்பு கோரினார்.

மேலும், அபராதத் தொகையை செலுத்துவதாக உறுதியளித்தார். அதனைத்தொடர்ந்து, போலீசார் அவரை விடுவித்தனர். வடமாநில வாலிபர், ரயில்வே அதிகாரிகள் ரயில் நிலைய நடைமேடையில் கட்டிப்பிடித்து உருண்டு சண்டையிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

The post தாம்பரம் ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர், டிக்கெட் பரிசோதகர் கட்டிப்புரண்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: