தேனிக்காரரை விட்டு எதிர்முகாமிற்கு செல்லும் ஆதரவாளர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தேனிக்காரர் நடத்திய ஒரு மாநாட்டுக்கு பிறகு அணி தாவும் படலம் அதிகரித்துள்ளதாமே, உண்மையா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஒற்றைத்தலைமை பிரச்னையால், தனி அணியாக சென்ற தேனிக்காரர் பின்னால் இலை கட்சியைச் சேர்ந்த ஆறு மக்கள் பிரதிநிதிகள் தான் இருக்காங்களாம். திருச்சி கூட்டத்தில் இவர் பேச்சு ரொம்பவே சேலம்காரரை காயப்படுத்தி இருக்காம். இதனை இப்படியே வளர விடக்கூடாது என்று நினைத்து சேலத்துக்காரர் அதிரடி நடவடிக்கையில் இறங்கி இருக்கிறாராம். தேனிக்காரரின் சமூகத்தினர் மூலம், அவருக்கு தற்போது எதிர்ப்புகளை கொடுக்கும் பணி முதல் கட்டமாக துவங்கி உள்ளதாம். அதை வைத்து தேனிகாரரை துளைத்தெடுக்கும் நடவடிக்கையில் சேலம்காரர் இறங்கி இருக்கிறாராம். கட்சியின் ஐடி விங்கில் உள்ள மாநில நிர்வாகி, தனது தந்தையும் எம்எல்ஏவாக இருப்பதால், இவர் மூலம் தேனிக்காரருக்கு தினந்தோறும் எதிர்ப்பு குரல் கொடுக்க துவங்கி இருக்கிறாராம். கட்சிக்கொடி, சின்னத்தை பயன்படுத்தக்கூடாது. தேனிகாரர் விரும்பினால், இதே வண்ணத்தில், கட்சிக்கொடியை தயாரித்து, அதில், தனது படத்தை வைத்து கொண்டு புதிய கட்சியை துவங்கலாம் என காமெடியாக ஆலோசனை சொல்லி வருகிறாராம். அதேபோல், உதயமான முன்னாள் அமைச்சரும், இலை கட்சி, கொடி, சின்னத்தை தேனிக்காரர் பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கை விடுத்து மாவட்டம் தோறும் எச்சரித்து வருகிறாராம்.
இவர்களின் பேச்சு, எதிர்ப்புக்கு, தென்மாவட்டத்தில் உள்ள இந்த சமூகத்தை சேர்ந்த கட்சியினர் மத்தியில் நல்ல வரவேற்பாம். அம்மையார் உயிருடன் இருந்தபோது, தமிழகத்தை நாம் மறைமுகமாக ஆண்டோம். ஆனால், இன்று, கொங்கு மண்டலத்துக்காரர் கைக்கு கட்சி செல்ல தேனிக்காரர்தான் காரணம் என அவர் மீது கடுங்கோபத்தில் இருக்காங்களாம். பொதுக்கூட்டங்களில், தேனிக்காரர் இலை கட்சியின் கொடி, சின்னம் பயன்படுத்தக்கூடாது எனக்கோரி, சேலத்துக்காரர் நீதிமன்றத்துக்கு போகப்ேபாகிறாராம். இது தேனிகாரருக்கு பின்னடைவை தரும்னு அவரது அணியில் உள்ளவர்களே பேசிக்கிறாங்க. மேலும் சமீபத்திய கோர்ட் உத்தரவால், அவரது சமூகத்தை சேர்ந்தவரும், தேனிக்காரரின் ஆதரவு பெற்ற எம்எல்ஏவும், கடும் அதிருப்தியில் இருக்காங்க. திருச்சி கூட்டத்துக்கு பல லட்சம் செலவு செய்தோம். இதை தேனிக்காரர் திருப்பி தர மாட்டார். இனிமேல் நாம் இவரை நம்பி இவரது அணியில் இருந்தால் நம்முடைய அரசியல் அஸ்தமனமாகிவிடும். இதனால், அணி டூ அணி தாவி விடலாமா என தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் உள்ளாராம். ஆனால், பெரும்பாலானோர் தேனி பஸ்சில் இருந்து சேலம் பஸ்சில் ஏறிட்டாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கோவை என்றாலே அரசு அலுவலகத்திலும் அரசியல் குழப்பம்னு சொல்றாங்களே, அது என்ன…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாநகராட்சி மேற்கு மண்டல பகுதியில் மண்டல சுகாதார ஆய்வாளர் பணியில் ஒருவர் இருக்கிறாராம். நான்கெழுத்து பெயர் கொண்ட இந்த அதிகாரி, அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வதை வாடிக்கையாக வைத்து கொண்டுள்ளாராம். குறிப்பாக, தமிழ்நாடு அரசுக்கு எதிரான நிலையில் இருப்பது என்பதை தன் கொள்கையாகவே வைத்துள்ளாராம். தாமரை கட்சியினருடன் கைகோர்த்துக்கொண்டு, அவர்கள் சொல்படியே நடக்கிறாராம். ஒன்றிய அரசின் ‘ஸ்வட்ச் பாரத்’ திட்டம் தொடர்பாக இந்தியில் விழிப்புணர்வு கோவை பகுதியில் விநியோகித்து கலக்கினாராம். தாமரை கட்சியினரின் மனதை குளிர்வித்தாராம். இது, மாநகராட்சி கமிஷனர் கவனத்துக்கு வரவே, உடனடியாக இடமாற்றம் தானாம். தற்போது, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை ஆகியவற்றை கையாளும் விவகாரத்தில், மாநகராட்சி கமிஷனர் உத்தரவை காற்றில் பறக்கவிட்டுள்ளாராம். இது தொடர்பாக கமிஷனர் விளக்கம் கேட்டபோது, அவருக்கே ‘வகுப்பு’ எடுத்துள்ளார். இதனால், கோபம் அடைந்த கமிஷனர், இவரை வெள்ளலூர் குப்பைக்கிடங்கு மேம்பாட்டு பணிக்கு இரண்டாவது முறையாக பணியிட இடமாற்றம் செய்தாராம். அடிக்கடி வம்பில் சிக்கும் இவர், தனக்கு கீழ் நிலையில் உள்ள இரண்டு சுகாதார ஆய்வாளர்களை கைக்குள் போட்டுக்கொண்டு, வசூல் குவிப்பது, பெண் துப்புரவு பணியாளர்களிடம் அஜால், குஜால் வேலையில் இறங்குவது என எல்லா சட்டவிரோத செயல்களையும் ஒன்றிய பவர் தனக்கு பின்னால் இருக்கிறது என்ற நம்பிக்கையில் செய்து வருகிறாராம். இவர், ஓவராக ஆட்டம் போட்டதால், தற்போது கமிஷனர் பிடியில் உள்ளாராம். மாநில அரசின் சம்பளம் வாங்கிக்கொண்டு, ஒன்றிய அரசுக்கு விசுவாசமாக இருப்பது தப்பு. இது ‘உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது போல இல்லையா’’ என கோவை மண்டலத்தில் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை ஒரே பேச்சா இருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வெயிலூர்ல என்ன விசேஷம் ஓடுது…’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாநகரம் 1வது மண்டலத்துக்கு உட்பட்ட வார்டுல, தாமரை கட்சி சார்பில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட பெண் ஒருத்தரு, குறைந்த வாக்குகளுடன் தோல்வியை தழுவினாங்க. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு மாவட்ட அளவுல போஸ்டிங் போட்டாங்க. அந்த பெண் நிர்வாகி மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில சமீபத்துல ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செஞ்சாங்க. அந்த நிகழ்ச்சியை மண்டலத்துல இருக்குற தாமரை கட்சி நிர்வாகிங்க ஒட்டுமொத்தமா புறக்கணிச்சிட்டாங்களாம். அதோடு இல்லாம யாரை கேட்டு நிகழ்ச்சி நடத்துற அப்படின்னு ஒரு சிலர் கேள்வியும் கேட்டிருக்காங்க. ‘கட்சிக்கு இப்போ வந்தவங்க எல்லாம் பெரிய பதவிக்கு போயிடுறாங்க, கட்சிக்காக உழைத்து கொண்டிருப்பவர்களை யாரும் கண்டுக்கலன்னு தாமரை கட்சியை சேர்ந்தவங்க கண்ணை கசக்குறாங்களாம். ஏற்கனவே 1வது மண்டலத்துல தாமரை கட்சி இருக்குதானே தெரியல. இப்போ இருக்குற சிலரும் ஒட்டுமொத்தமா வேறு கட்சிக்கு போக முடிவு செஞ்சிருக்காங்களாம். இது தான் அரசியல் வட்டாரத்தில் பெரிசா பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.

The post தேனிக்காரரை விட்டு எதிர்முகாமிற்கு செல்லும் ஆதரவாளர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Related Stories: