இதுவரைக்கும் 41 லட்சம் திறன் சான்றிதழ்களை நான் முதல்வன் திட்டத்தின் மூலம் நாங்கள் வழங்கி இருக்கின்றோம். அதுபோல, 3 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்களுக்கு, ‘நான் முதல்வன் வேலைவாய்ப்பு முகாம்கள்’ மூலம் வேலைவாய்ப்பையும் நான் முதல்வன் திட்டம் வழங்கி இருக்கின்றது. ஏழ்மை போன்ற காரணங்களால் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரி சேர முடியாமல் இருக்கின்ற மாணவர்களை கண்டறிந்து உயர்கல்வி சேர கவுன்சலிங் மற்றும் உதவிகளையும் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் செயல்படுத்துகிறோம். நான் முதல்வன் திட்டத்தினுடைய வெற்றியின் தொடர்ச்சியாக தான் முதல்வர், இன்று ‘வெற்றி நிச்சயம்’ என்ற திட்டத்தையும் தொடங்கி வைத்துள்ளார்.
‘வெற்றி நிச்சயம்’ என்பது இந்த திட்டத்தின் பெயர் மட்டுமல்ல. இதன் கீழ் பயிற்சி பெறுகின்ற ஒவ்வொரு இளைஞருக்கும் வெற்றி நிச்சயம் என்பதே இந்த அரசினுடைய ஒரே இலக்கு. இந்த பிரத்யேக திறன் பயிற்சி, 38 தொழிற்பிரிவுகளில் 165 பயிற்சிகளை 500க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்களின் மூலம் வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமல்ல, திறன் பயிற்சி பெறுவதற்கான கட்டணத்தையும் அரசே செலுத்த உள்ளது. முதற்கட்டமாக, ஆண்டுக்கு 75 ஆயிரம் மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்கப்பட இருக்கிறது.
இந்த திட்டத்துக்காக முதல்வர் முதல்கட்டமாக ரூ.100 கோடி நிதியை ஒதுக்கி இருக்கிறார். மாற்றுத்திறனாளிகள், ஏழை, எளிய மாணவர்கள் போன்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் திறன் பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. அவர்களுக்கான ஊக்கத்தொகையையும் அரசு சார்பாக வழங்க உள்ளோம். ஆகவே, இந்த திட்டம், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயத்தையும் வெற்றி பெற்ற சமுதாயமாக ஆக்கப்போகிறது என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
The post ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 75,000 மாணவர்களுக்கு பயிற்சி வழங்க ரூ.100 கோடி நிதி: துணை முதல்வர் உதயநிதி தகவல் appeared first on Dinakaran.
