சென்னை: சென்னையில் பிரபல தனியார் உணவு விடுதியில் பிஸ் பெஸ்ட் காங்க்ளேவ் 2025 தொழில் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் தொழில் வளர்ச்சிக்கான புதிய வழிகளைக் கண்டறிந்தல், மின்சாரம், ரியல் எஸ்டேட், எக்கு – கட்டுமானப் பொருட்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், உடை, காகிதம் மற்றும் பேக்கேஜ் தொழில், துணைத் துறைகள் மற்றும் விளையாட்டு போன்ற முக்கிய தொழில் துறைகளை மையமாக கொண்டு நடைபெற்ற இந்த மாநாட்டில் 500 தொழில்முனைவோர் பங்கேற்றனர்.
இதில் சிறப்பு விருந்தினராக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு மாநாட்டினை தொடங்கி வைத்தார். மேலும் ராஜஸ்தான் கூட்டுறவு துறை அமைச்சர் கவுதம் குமார் டாக், தமிழ்நாடு ராஜஸ்தானி அசோசியேஷன் தலைவர் நரேந்திர ஸ்ரீஸ்ரீமல் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:
பிஸ் பெஸ்ட் காங்க்ளேவ் 2025 மாநாடு ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு, மகேஷ்வரி சபா மற்றும் ஆகர்ட்ரேட் ஆகிய மூன்று அமைப்புகளின் இணைந்து சிறப்பாக நடத்தி உள்ளன. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு ஆதாரமாக மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா அமைத்த மதிப்பு கோட்பாடு தற்போது வரை தூணாக உள்ளன. அந்தவகையில் மாநிலத்தின் மொத்த வளர்ச்சி விகிதம் 11.19 சதவீதமாக உள்ளன. குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், வாகன மற்றும் உற்பத்தித் துறைகளில் ஆண்டு தோறும் சிறப்பான முன்னேற்றம் காணப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை சமத்துவம், பண்பு, சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றால் சிறந்து விளங்குகிறது. எனவே, இளம் தலைமுறையை தொழில் முனைவர்களாக உருவாக்குவது இந்நேரத்தின் அவசியமாகும். தற்போதைய ஏஐ காலத்தில், இளைஞர்கள் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு ஏற்ற வகையில் திறன் பெற வேண்டும். இது எதிர்காலத் தொழில்முனைவர்கள் மற்றும் திறமையான பணியாளர்கள் உருவாக வழிவகுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
