எனது படம் பற்றிய பதிவை நீக்கக்கோரி கேட்ட போது ரூ.10 லட்சம் பணம் கேட்டு என் உயிர்நாடியில் எட்டி உதைத்தார்

* யூடியூபர் சங்கர் மீது புகார் அளித்த திரைப்பட தயாரிப்பாளர் மகேஷ் ரம்யா பரபரப்பு பேட்டி

சென்னை: என் படத்தை பற்றிய பதிவை நீக்க கோரி கேட்ட போது, அவரது அலுவலகத்திற்கு வரவழைத்து ரூ.10 லட்சம் பணம் கேட்டார். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் என் உயிர்நாடியில் எட்டி உதைத்து தாக்கியதாக திரைப்பட தயாரிப்பாளர் மகேஷ் ரம்யா, யூடியூபர் சங்கர் மீது பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர் மகேஷ் ரம்யா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நான் ‘ரெட் அண்ட் பாலோவ்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர். நான் கொடுத்த புகாரின் பேரில் யூடியூபர் சங்கர் கைது செய்யப்பட்டார்.

நான் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, என் படம் சம்பந்தமாக தவறாக கூறிய விஷயங்களை நீக்குமாறு கூறினேன். அதற்கு ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டினார். என்னை அவரது அலுவலகத்திற்கு வரச்சொன்னார்.
அதன்படி நானும் படத்தின் இயக்குநரும் கடந்த ஜூன் 30ம் தேதி அவரது அலுவலகத்திற்கு சென்றேன். மீண்டும் என்னுடைய படத்தை பற்றி தரக்குறைவாக பேசாமல் இருக்க எனக்கு ரூ.10 லட்சம் கொடு இல்லையென்றால் உன்னுடைய படம் வெளிவராமல் இருக்க நான் வீடியோ வெளியிடுவேன் என்று என்னை பயமுறுத்தினார்.

என்னுடைய கையில் ரூ.1 லட்சம் தான் உள்ளது என்றேன். அதற்கு, ‘நான் என்ன பிச்சைக்காரனா’ என்று சொல்லியபடி என் கையில் இருந்த பணத்தை பிடுங்கி கொண்டு கீழே தள்ளி உயிர்நாடியில் எட்டி உதைத்தார். அவர் மட்டுமில்லாமல் அவரது டீமில் உள்ள மாலதியும், அடையாளம் காட்டக்கூடிய 4 நபர்களும் என்னையும், என்னுடைய படத்தின் இயக்குநரையும் அடித்து கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர். அங்கிருந்து தப்பித்து நாங்கள் இருவரும் வெளியே வந்த பிறகு இயக்குநர் என்னை சைதாப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

அங்கு சிகிச்சை பெற்ற பின்பு மறுநாள் ஜூலை 1ம் தேதி நான் புகார் கொடுத்தேன். அந்த புகாரின் அடிப்படையில் யூடியூபர் சங்கரை போலீசார் கைது செய்தனர். தற்போது பத்திரிகை செய்திகளில் தவறுதலாக என்னுடைய பெயரை புருஷோத்தமன் என்று வெளியிடுகின்றனர். புருஷோத்தமன் என்பது என்னுடைய அப்பாவின் பெயர். என்னுடைய பெயர் மகேஷ் ரம்யா. நான் எனது மனைவியின் பெயரையும் இணைத்து படம் தயாரித்து வருகிறேன்.

தற்போது ஊடகங்களில் தவறுதலாக ரூ.1 லட்சம் பிடுங்கி கொண்டார்கள் என்று செய்தி வருகிறது. அது முற்றிலும் தவறு. ஏனென்றால் அன்று யூடியூபர் சங்கர் கைதின் போது வெளியிட்ட வீடியோவில் படித்த விவரத்தின் அடிப்படையில் என்னுடைய அப்பா பெயரையும், ரூ.2 லட்சம் பிடுங்கி கொண்ேடன் என்று யூடியூபர் சங்கர் அந்த வீடியோவில் தவறாக செய்தியை பரப்பினார். நான் மற்றும் எனது இயக்குநர் இருவரும் அவரது அலுவலகத்திற்கு வரவே இல்லை என்று பொய்யான தகவலை கைதின் போது வெளியிட்டார்.

இதில் ஆயிஷா சாதிக் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தான் கைது செய்ததாகவும், தவறுதலான செய்திகளை சில ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. இந்த தவறான செய்திகளை ஊடகங்களிருந்து நீக்குபடி கேட்டுக்கொள்கிறேன். அதில் ஆயிஷா சாதிக் என்பவர் இயக்குநர் ‘வண்ணம் தமிழா சாதிக்’ அவர்களின் மனைவி ஆவார். அவர் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக உள்ளார். இது தான் உண்மையான தகவல். எனவே பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: