தர்மபுரி: மகளிர் உரிமைத்தொகை விடுபட்டவர்கள் கோரிக்கை வைத்தால் நிச்சயம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி மோளையானூரில் நேற்று நடைபெற்ற விழாவில், மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன்-ரோஜா தம்பதியின் மகன் எழில்மறவன்- கிருத்திகா ஆகியோரது திருமணத்தை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து நடத்தி வைத்து பேசியதாவது:
நேற்று முன்தினம், ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற தலைப்பில், ஒரு மாபெரும் நிகழ்ச்சியை சென்னையில் நடத்தி, அதன் மூலமாக கூடுதலாக 17 லட்சம் மகளிருக்கு கலைஞர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 1 கோடியே 13 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக 17 லட்சம் சகோதரிகளுக்கு, அதாவது 1 கோடியே 30 லட்சம் பேருக்கு வழங்கக்கூடிய நிலையை உருவாக்கியிருக்கிறோம்.
இன்னும் கூட சில தகுதி உள்ளவர்கள் விடுபட்டிருந்தால், அவர்கள் உடனடியாக கோரிக்கை வைத்தால், அவர்களுக்கும் நிச்சயமாக வழங்கப்படும் என்ற நம்பிக்கையையும், உறுதியையும் நான் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அதுமட்டுமல்ல, அது இன்னும் உயரும் என்று கூட சொல்லியிருக்கிறேன். பத்திரிகைகளை பார்த்திருப்பீர்கள். ஜிடிபி வளர்ச்சியில், இன்றைக்கு தமிழ்நாடு தான் நம்பர் ஒன் மாநிலமாக உருவாகியிருக்கிறது. இது நாங்கள் வெளியிட்ட அறிக்கை அல்ல. ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கை. நீங்கள் நினைத்துப் பாருங்கள். எவ்வளவோ தடங்கல்கள், எவ்வளவோ சோதனைகளையெல்லாம் தாண்டி, இன்றைக்கு சாதனை படைத்திருக்கும் ஆட்சி தான் தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய திராவிட மாடல் ஆட்சி.
நம்முடைய சாதனைகளை, திட்டங்களை வீடு, வீடாக சென்று, மக்களிடத்தில் எடுத்து செல்லக்கூடிய பணிகளில் ஈடுபட்டு, அவற்றையெல்லாம் வாக்குகளாக மாற்ற வேண்டும், 7வது முறையாக திராவிட மாடல் ஆட்சி உருவாகியிருக்கிறது என்ற பெருமை நமக்கு வந்தாக வேண்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
