பாஜவில் இணைந்த சீதா சோரன் பற்றி தலைவணங்குவது ஜார்க்கண்ட் மக்களின் ரத்தத்தில் இல்லை: ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் ஆவேசம்

ராஞ்சி: “தலைவணங்குவது ஜார்க்கண்ட் மக்களின் ரத்தத்தில் இல்லை” என முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் ஆவேசமாக தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா நிறுவனரும், முன்னாள் முதல்வருமான சிபு சோரனின் மூத்த மருமகள் சீதா சோரன். 3 முறை பேரவை உறுப்பினராக இருந்த சீதா சோரன், கட்சியின் பொதுசெயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். நிலக்கரி சுரங்க முறைகேடு விவகாரத்தில் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட பிறகு, அவரது மனைவியும் சிபு சோரனின் இளைய மருமகளுமான கல்பனா சோரன் ஜார்க்கண்ட் முதல்வராக பதவி ஏற்பார் என செய்திகள் வௌியாகின.

அப்போது, “பேரவை உறுப்பினராக கூட இல்லாத, அரசியல் அனுபவமற்ற கல்பனா சோரன் பெயர் ஏன் முதல்வர் பதவிக்கு பரிந்துரை செய்யப்படுகிறது” என்று சீதா சோரன் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த விவகாரத்தில் சீதா சோரனுக்கும், ஹேமந்த் சோரன் குடும்பத்தாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனிடையே ஜார்க்கண்ட் முதல்வராக சம்பாய் சோரன் பதவி ஏற்றார். இந்நிலையில் “14 ஆண்டுகளாக கட்சிக்காக பாடுபட்ட எனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. என் கணவர் துர்கா சோரனின் மறைவுக்கு பின் நானும், என் குடும்பமும் தனிமைப்படுத்தப்பட்டோம்” என்று குற்றம்சாட்டிய சீதா சோரன், நேற்று முன்தினம் பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து பாஜவில் அவர் இணைந்தார்.

இதுகுறித்து ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் கூறியதாவது, “கட்டிட கலைஞராக வேண்டும் என விரும்பிய ஹேமந்த் சோரனுக்கு அரசியலுக்கு வர விருப்பமில்லை. ஆனால் அண்ணன் துர்கா சோரனின் அகால மறைவுக்கு பிறகு, ஜேஎம்எம் கட்சியின் மரபு, போராட்டங்களை முன்னெடுத்து செல்லவே அவர் அரசியலுக்கு வந்தார். முதலாளிகள், நிலப்பிரபுக்களுக்கு எதிராக துர்கா சோரனும், என் கணவர் ஹேமந்த் சோரனும் போராடினர். அவர்கள் யாருடைய மிரட்டலுக்கும் தலை வணங்காமல் போராடினர். தலை வணங்குவது, அடிபணிவது ஜார்க்கண்ட் மக்களின் ரத்தத்தில் இல்லை” என்று ஆவேசமாக தெரிவித்தார்.

 

The post பாஜவில் இணைந்த சீதா சோரன் பற்றி தலைவணங்குவது ஜார்க்கண்ட் மக்களின் ரத்தத்தில் இல்லை: ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: