சிராஜ், யஷ் தயாள் அபார பந்துவீச்சு குஜராத் டைட்டன்ஸ் திணறல்

பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், முகமது சிராஜ் மற்றும் யஷ் தயாள் வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய குஜராத் டைட்டன்ஸ் 19.3 ஓவரில் 147 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டு பிளெஸ்ஸி முதலில் பந்துவீச முடிவு செய்தார். விரித்திமான் சாஹா, கேப்டன் ஷுப்மன் கில் இணைந்து குஜராத் இன்னிங்சை தொடங்கினர். சாஹா 1 ரன், கில் 2 ரன் எடுத்து சிராஜ் வேகத்தில் அடுத்தடுத்து வெளியேறினர். சாய் சுதர்சன் 6 ரன் மட்டுமே எடுத்து கிரீன் பந்துவீச்சில் கோஹ்லி வசம் பிடிபட… குஜராத் அணி 5.3 ஓவரில் 19 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது.

இந்த நிலையில், ஷாருக் கான் டேவிட் மில்லர் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடினர். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 61 ரன் சேர்த்தது. மில்லர் 30 ரன் (20 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி கர்ண் பந்துவீச்சில் மேக்ஸ்வெல் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஷாருக் கான் 37 ரன் (24 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ராகுல் திவாதியா 35 ரன் (21 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), ரஷித் கான் 18 ரன் விளாசி பெவிலியன் திரும்பினர். கடைசி ஓவரில் மானவ் சுதர் (1), மோகித் ஷர்மா (0), விஜய் ஷங்கர் (10) அணிவகுக்க குஜராத் டைட்டன்ஸ் 19.3 ஓவரில் 147 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

நூர் அகமது (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆர்சிபி பந்துவீச்சில் சிராஜ், தயாள், வைஷாக் தலா 2 விக்கெட், கிரீன், கர்ண் ஷர்மா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 148 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் களமிறங்கியது.

The post சிராஜ், யஷ் தயாள் அபார பந்துவீச்சு குஜராத் டைட்டன்ஸ் திணறல் appeared first on Dinakaran.

Related Stories: