சங்கராபுரம் அருகே இன்று முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே பாவளம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் இன்று காலை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பாவளம் கிராமத்தில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோயில் திருவிழா ‌கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு பாரதம் படித்தல் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மேலும் அம்மனுக்கு கூழ் வார்த்தல், அம்மன் வீதி உலா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிலையில் விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. முன்னதாக முத்துமாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர் பன்னீர், தேன், சந்தனம் உள்பட பல்வேறு வகையான நறுமணப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்ட முத்துமாரியம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு அலங்கரிக்கப் பட்டதேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளித்தார். இதில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 30 அடி நீளமுள்ள ராட்சத மாலையால் அலங்கரிக்கப்பட்ட தேர் அக்கிராமத்தில் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு ஆட்டம் பாட்டம் உற்சாகத்துடன் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதையொட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

The post சங்கராபுரம் அருகே இன்று முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: