சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற ஒருங்கிணைந்த இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபையான அசோசெம் சார்பில் நடத்தப்படும் MSME தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மாநாட்டை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் குத்து விளக்கேற்றி துவக்கி துவக்கி வைத்தார்கள். அப்போது அவர் பேசியதாவது; தமிழ்நாட்டில் உள்ள MSME தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்கு புதிய கொள்கைகளை உருவாக்க ஆலோசனைகள் வழங்கவும் தொழிலுக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கும் கருத்துக்களை எடுத்துரைக்கவும், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கில் நடத்தப்படும் MSME வளர்ச்சி மாநாட்டை தொடங்கி வைப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த மாநாட்டினை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்துள்ள அசோசெம் தமிழ்நாடு மாநிலத் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு என் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தங்களின் பங்களிப்பை அளிப்பதற்காக 1920- ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த கூட்டமைப்பானது இன்று 400 சங்கங்கள் 4 லட்சத்து 50 ஆயிரம் உறுப்பினர்களுடன் மிகச் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. மிக பெருத்தமான காலக்கட்டத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. சமீபத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் அமெரிக்க நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்டு 11,516 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், 19 பெரு நிறுவனங்களுடன் 7,616 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளார்கள்.
தொழில் துறைக்கு உகந்த சூழ்நிலை நிலவும் காலக்கட்டத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில், நிதி முதலீடு பசுமை தொழில்நுட்பம் அடிப்படை கட்டமைப்புகள், வளர்ச்சிக்கான கொள்கைகள், வணிகம் மற்றும் சந்தைப்படுத்துதல், ஆகியவற்றை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த மாநாட்டில், கழக அரசால் MSME தொழில் நிறுவனங்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களை எடுத்துரைக்க நல்ல ஒரு வாய்ப்பை வழங்கிய அசோசெம் தலைவருக்கும், சங்க நிர்வாகிகளுக்கும், எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களே நாட்டின் பொருளாதாரத்திற்கும் தொழில் வளர்ச்சிக்கும் அடித்தளமாக உள்ளது. MSME தொழில் நிறுவனங்கள் இந்திய ஏற்றுமதியில் 42 சதவீத பங்களிப்பையும் மொத்த உள்நாட்டு உற்பத்தில் 30 சதவீத பங்களிப்பையும வழங்குகின்றன.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான உள்நாட்டு உற்பத்தி, வேலைவாய்ப்பு, ஏற்றுமதி, கிராமப்புர பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் MSME நிறுவனங்களின் பங்கு மிக முக்கியமானது. முதலமைச்சர் அவர்களின் ஓயாத உழைப்பாலும், சீரிய திட்டங்களாலும், சிறந்த நிர்வாகத்தாலும், தொழில் துறையில் இந்திய அளவில் தமிழ்நாடு உள்நாட்டு உற்பத்தியில் 9.07 சதவீதம் பங்களித்து 2 ஆம் இடத்திலும், ஏற்றுமதியில் 9.5 சதவீதம் பங்களித்து 3 ஆம் இடத்திலும் உள்ளது. தமிழ்நாட்டில் 26 லட்சத்து 61 ஆயிரம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி இந்திய அளவில் 2 ஆம் இடத்தில் உள்ளது. இந்த சாதனைகளுக்கு எல்லாம் அடித்தளமாக விளங்குவது “ திராவிட மாடல் ஆட்சி ” என்பதை பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சர் குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் சமத்துவம், சமூக நீதி, சமச்சீர் வளர்ச்சி ஆகியவற்றை குறிக்கோளாகக் கொண்டு ஆட்சி பொறுப்பேற்ற 3 1/2 ஆண்டுகளில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டம், தமிழ்நாடு வர்த்தக வரவு தள்ளுபடி தளம், குறுங் குழும மேம்பாட்டு திட்டம், பெருங்குழும மேம்பாட்டு திட்டம், அடுக்குமாடி தொழில் வளாகம், தொழிலாளர் தங்கும் விடுதி, தமிழ்நாடு SC-ST புத்தொழில் ஆதார நிதி, தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் என பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி இந்த துறையை மிகப் பெரிய வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றுள்ளார் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழில்முனைவோர்களுக்காக Micro Cluster மற்றும் Mega Cluster திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக நடைபெறும் தொழில்களுக்கு, உட்கட்டமைப்பு வசதி அமைக்கவும், விலை மதிப்பு மிக்க தொழில்நுட்ப கருவிகள், இயந்திரங்கள் வாங்கவும், ஒன்றிய, மாநில அரசுகளின் மானியங்களுடன் குழுமங்கள் பொது வசதி மையங்கள் பொது உற்பத்தி மையங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் MSME தொழில் நிறுவனங்களின் உற்பத்தி தரத்தினை உலக அளவில் உயர்த்திடும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் – திருமுடிவாக்கத்தில் ரூ. 47 கோடியே 62 லட்சம் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் துல்லிய உற்பத்தி பெருங்குழுமத்தில் தொழில்நுட்ப கருவிகளை உலகத் தரத்தில் பரிசோதிக்கும் உயர்தொழில்நுட்ப பரிசோதனை கூடம், முதல்வர் அவர்களால் விரைவில் துவக்கி வைக்கப்பட உள்ளது. விழுப்புரம் மாவட்டம் – திண்டிவனத்தில் ரூ. 155 கோடி திட்ட மதிப்பீட்டில், மருந்தியல் பெருங்குழுமத்திற்கான பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வர உள்ளது எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கழக அரசு பொறுப்பேற்று இதுவரை ரூ. 203 கோடியே 95 லட்சம் திட்ட மதிப்பீட்டில் ரூ 161 கோடியே 38 லட்சம் மானியத்துடன் 43 குறுந்தொழில் குழுமங்கள் – Micro Cluster அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில், கடலூர் மாவட்டம்- முந்திரி குழுமம், கோவை மாவட்டம் – அலுமினியம் அச்சு வார்ப்பு குழுமம்,மதுரை மாவட்டம் – வெப் ஆப் செட் பிரின்டிங் குழுமம், செங்கல்பட்டு மாவட்டம் – நவீன புகைப்படக் குழுமம் துவங்கப்பட்டுள்ள நிலையில், 39 குழுமங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு சிட்கோ நிறுவனம் குறு, சிறு குழுமங்களுக்காக ஒன்றிய அரசால் ஒப்புதல் பெறப்பட்ட 49 பொது வசதி மையங்களில் 32 பொது வசதி மையங்கள் தற்போது ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதில், இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அசோசெம் போன்ற கூட்டமைப்புகள் அரசால் முன்னெடுக்கப்படும் Micro – Mega Cluster களுக்கு தங்களது ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.
MSME தொழில் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 8,598 ஏக்கர் பரப்பளவில் 15 ஆயிரத்து 171 தொழிற்மனைகள் 130 தொழிற்பேட்டைகளை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ. 295 கோடி மதிப்பீட்டில் 512 ஏக்கர் பரப்பளவில் 8 புதிய தொழிற்பேட்டைகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களில் 248.01 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.115.53 கோடி மதிப்பில் 8 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 8 மாவட்டங்களில் 283.40 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.115.64 கோடி மதிப்பில் 10 புதிய தொழிற்பேட்டைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறுந்தொழில்கள் தொடங்கிட நகர்புரங்களில் போதிய இடவசதி இல்லாததால், அவர்கள் உடனடியாக தொழில் தொடங்கிட அடுக்குமாடி தொழில் வளாகம் கட்டும் திட்டத்தின் கீழ் கிண்டி மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டைகளில், ரூ.158 கோடியே 62 லட்சம் மதிப்பீட்டில் 264 தொழில் கூடங்கள் கொண்ட புதிய அடுக்குமாடி தொழில் வளாகங்கள் கடந்த பிப்ரவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது. கிருஷ்ணகிரி, மதுரை, கோயம்புத்தூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் 5 இடங்களில், ரூ. 208 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டில் அடுக்குமாடி தொழில் கூடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
MSME தொழில் நிறுவனங்களில் வெளியூரில் இருந்து வந்து பணிபுரியும் தொழிலாளர்கள் குறைந்த வாடகையில் தங்குவதற்காக, சென்னை – அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ரூ. 29 கோடியே 47 லட்சம் மதிப்பில் 800 தொழிலாளர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்ட தொழிலாளர் தங்கும் விடுதி கடந்த பிப்ரவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது. கோயம்புத்தூர் – குறிச்சி தொழிற்பேட்டையில் ரூ. 22 கோடி மதிப்பீடில் கட்டப்பட்டு வரும் தொழிலாளர்கள் தங்கும் விடுதி ஒரிரு மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் திறந்து வைக்கப்படும். இந்தியாவிலேயே முதல் முறையாக முதல்வர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட “தமிழ்நாடு கடன் உத்திரவாத திட்டத்தின் கீழ் இதுவரை 38 ஆயிரத்து 270 தொழில் முனைவோர்களின், ரூ. 5 ஆயிரத்து 715 கோடி வங்கி கடனுக்கு, மாநில அரசின் கடன் உத்தரவாதமாக ரூ. 563 கோடியே 12 லட்சம் அரசு வழங்கியுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெரு நிறுவனங்களுக்கு குறு, சிறு நிறுவனங்கள் செய்து கொடுக்கும் பொருட்களுக்கான விலைபட்டியல்களை- வங்கிகளில் வைத்து விரைவாக கடன் பெற செயல்படுத்தப்படும் தமிழ்நாடு வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடி தளம் – Tamil Nadu-TReDS திட்டத்தின் கீழ், 1,491 MSME நிறுவனங்களுக்கு ரூ. 2 ஆயிரத்து 139 கோடி மதிப்பில் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. MSME நிறுவனங்கள், வழங்கிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தொகையை பெருநிறுவனங்கள் வழங்காத பட்சத்தில், அவற்றை சட்டப்பூர்வமாக பெற்றுத்தர சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை வேலூர், தூத்துக்குடி ஆகிய 6 மண்டலங்களில் வசதியாக்கல் மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கழக அரசு பொறுப்பேற்ற 3 ½ ஆண்டுகளில் இம்மன்றங்கள் மூலம் 2,008 MSME நிறுவனங்களுக்கு ரூ. 374 கோடியே 76 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
கழக அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில், NEEDS – UYEGP-PMEGP – PMFME அண்ணல் அம்பேத்கர் தொழில்முன்னோடிகள் திட்டம் (AABCS) ஆகிய 5 திட்டங்களின் கீழ் ரூ.1,104 கோடியே 78 லட்சம் மானியத்துடன் ரூ. 2,993 கோடியே 97 லட்சம் வங்கி கடனுதவி வழங்கி 33 ஆயிரத்து 466 இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் 3 லட்சம் நபர்களுக்கு மேல் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் தலைமையிலான கழக அரசு கடந்த 3 ½ ஆண்டு காலத்தில் இது போன்ற பல்வேறு திட்டங்களை MSME தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக செயல்படுத்தி வரும் நிலையில், அசோசெம் போன்ற தொழில் கூட்டமைப்பினர் அரசின் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்த தங்களின் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டு இந்த மாநாடு MSME தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பயன் உள்ளதாக அமைய வேண்டும் என கூறினார்.
இந்நிகழ்ச்சியில் MSME துறை அரசு செயலர் அர்ச்சனா பட்நாயக், நபார்டு தலைமை பொது மேலாளர் ஷாஜி, தேசிய MSME நிறுவனத்தின் இயக்குநர் சஞ்சு குளோரி ஸ்வரூபா, எல்.ஐ.சி. தென்னிந்திய மண்டல மேலாளர் வெங்கடரமணன், அசோசெம் தலைவர் சுஷ்மா பால் பெரில்லா, இணை தலைவர்கள் சக்திவேல் ராமசாமி, சுதிர் பணிகசேரி, அசோசெம் தமிழ்நாடு மாநில துணை தலைவர் கே.மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post MSME தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன் appeared first on Dinakaran.