சென்னை: திமுக ஆதிதிராவிடர் நலக்குழு தலைவரும் முன்னாள் அமைச்சருமான க.சுந்தரம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திமுகவின் ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான க. சுந்தரம் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். க.சுந்தரம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். கலைஞர் அவர்களின் அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும், பால்வளத்துறை அமைச்சராகவும் திறம்படப் பணியாற்றியவர்.
கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த க. சுந்தரம், கழகம் அறிவித்த போராட்டங்கள் அனைத்திலும் பங்கேற்ற தீரமிகு செயல்வீரர். தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் மிகுந்த பற்றும் பாசமும் கொண்டவர். கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மீஞ்சூரில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று அவரது உடல்நிலை குறித்துக் கேட்டறிந்த காட்சிகள் இப்போதும் என் நெஞ்சைவிட்டு அகலவில்லை. கடந்த ஆண்டு வேலூரில் நடைபெற்ற கழக முப்பெரும் விழாவில் க.சுந்தரம் அவர்களது கழகப் பணிகளைப் பாராட்டி அண்ணா விருதினையும் வழங்கியிருந்தேன்.
கழகப் பணியிலும், மக்கள் பணியிலும் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு செயல்பட்ட க.சுந்தரம் அவர்களது மறைவு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கும் கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post திமுக போராட்டங்கள் அனைத்திலும் பங்கேற்ற தீரமிகு செயல்வீரர்: க.சுந்தரம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.