புரட்டாசி மாத பவுர்ணமி; திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று 2வது நாளாக லட்சக்கணக்கானோர் தரிசனம்: கடல் உள்வாங்கியதால் பரபரப்பு


திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று 2வது நாளாக அதிகாலை முதல் சுவாமியை வழிபட்டனர். தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் மட்டுமே அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ளதால் சிறந்த ஆன்மீக தலமாக மட்டுமின்றி கடல் அழகை ரசிப்பதற்கு சுற்றுலாப்பயணிகளும் இங்கு அதிகமாக வருகின்றனர். திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலும், புண்ணிய தீர்த்தமான கடல் மற்றும் நாழிக்கிணறில் நீராடிய பிறகு அல்லது கடலில் கால் நனைத்த பிறகே சுவாமியை வழிபடுகின்றனர்.

கடந்த சில வருடங்களாக தமிழ் மாதங்களில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் மாலையில் திருச்செந்தூர் வந்து இரவு கடற்கரையில் தங்கி, தூங்கி, விழித்து அதிகாலையில் நாழிக்கிணறு மற்றும் கடலில் புனித நீராடி முருகப்பெருமானை எவ்வளவு கூட்டம் இருந்தாலும் காத்திருந்து வழிபட்டு தங்கள் இல்லத்துக்கு செல்கின்றனர். இதனால் மிகப்பெரிய பலன் கிடைக்கிறது என்பதால் பவுர்ணமி இரவு வழிபாட்டுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதே போல புரட்டாசி மாதப்பிறப்பான நேற்று பகல் 11.22 மணிக்கு தொடங்கிய பவுர்ணமியானது இன்று (செப். 18) காலை 9.04 மணி இருந்தது.

மேலும் மீலாடி நபி அரசு விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் மாலையிலே பக்தர்கள் திருச்செந்தூர் வரத் தொடங்கினர். நேற்றும் அதிகாலை முதலே பேருந்துகள், ரயில்கள் மற்றும் கார், வேன்களில் பக்தர்கள் திருச்செந்தூரில் குவியத் தொடங்கினர். பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறில் புனித நீராடி இலவச பொது தரிசனம், ரூ. 100 சிறப்பு கட்டண தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் வழி என அனைத்திலும் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை லட்சக்கணக்கான பக்தர்கள் நிலா ஒளியில் கடற்கரையில் தங்கினர்.

அவர்கள் இன்று அதிகாலை முதல் நாழிக்கிணறு மற்றும் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுவாமியை வழிபட்டனர். இதனால் கோயில் வளாகம் மட்டுமின்றி கடற்கரையே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடந்தது. பக்தர்களுக்கு தேவையான வசதிகளை திருக்கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். வழக்கமாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் கடல் நீர் மட்டத்தில் அவ்வப்போது மாற்றம் ஏற்படும்.

இந்நிலையில் நேற்று பகல் 11.22 மணி மணி முதல் இன்று காலை 9.04 மணி வரை பவுர்ணமி இருந்தது. இதன் தொடர்ச்சியாக திருச்செந்தூர் கோயில் பகுதியில் நேற்று மாலையும், இன்று காலை கடல் நீரானது, சுமார் 90 அடி உள்வாங்கி காணப்பட்டது. இதனால் கடலில் பாசி படர்ந்த படி பாறைகள் வெளியே தெரிந்தது. ஆனாலும் பக்தர்கள் வழக்கம் போல கடலில் புனித நீராடினர். பாதுகாப்பு பணியில் திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் திருச்செந்தூர் இன்ஸ்பெக்டர்கள் சுந்தரமூர்த்தி, கனகராஜ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான போலீசார் ஈடுபட்டனர்.

கூடுதல் வரிசைப்பாதை
பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக இலவச பொது தரிசனம் மற்றும் ரூ. 100 சிறப்பு தரிசனத்துக்காக கூடுதல் வரிசைப்பாதைகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் வேகமாக சுவாமி தரிசனம் செய்து வந்தனர். பக்தர்கள் பாதுகாப்பு மற்றும் தள்ளுமுள்ளு ஏற்படாமல் இருக்க போலீசார் வரிசைப்பாதையில் கண்காணிப்பினை பலப்படுத்தினர். மேலும் நகரக்குள் நெருக்கடியினை தவிர்க்கும் விதமாக போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். இன்று காலை முதலே பஸ் மற்றும் ரயிலில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறினர்.

The post புரட்டாசி மாத பவுர்ணமி; திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று 2வது நாளாக லட்சக்கணக்கானோர் தரிசனம்: கடல் உள்வாங்கியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: