சிறுமிக்கு பாலியல் தொல்லை 2 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த வளையல் வியாபாரி ராஜா (46). இவரது வீட்டின் மேல் தளத்தில் கணவரை பிரிந்த பெண் தனது 13 வயது மகளுடன் வசித்து வருகிறார். கடந்த 2019 மார்ச் 16ம் தேதி, அந்த பெண் வீட்டு வேலை செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு, ராஜா அவரது நண்பர்கள் ரத்தினம் (72), லட்சுமணன் (38) ஆகியோர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். இதுகுறித்து சிறுமி அருகிலுள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் குழந்தைகள் உதவி மையத்துக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலை கேட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ராஜா, ரத்தினம், லட்சுமணன் ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலெட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.ஜி.கவிதா ஆஜரானார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரத்தினம் கடந்த ஆண்டு இறந்ததால் இருவர் மீதான வழக்கு மட்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் ராஜா, லட்சுமணன் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை 2 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: