கழிவுநீர் அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தினால் தேசிய உதவி எண் 14420ல் புகார் தெரிவிக்கலாம்: தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வேண்டுகோள்

சென்னை: கழிவுநீர் அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தினால், கட்டணமில்லா தேசிய உதவி எண் 14420ல் புகார் தெரிவிக்கலாம் என்று தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் எம்.வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் தலைமை அலுவலகத்தில், தூய்மைப் பணியாளர்களின் நலன் குறித்த ஆய்வுக் கூட்டம், நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன் தலைமை வகித்தார்.

ஆய்வு கூட்டத்தில், தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன் பேசியதாவது:
மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டத்தின் பிரிவு 9-ன்படி மனிதர்களை கொண்டு கழிவுநீரகற்றினால், முதன் முறையாக மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ₹2 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். 2வது முறையாக மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ₹5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள், உள்ளிட்ட இடங்களில் உரிய அனுமதி மற்றும் உரிய பாதுகாப்பு உபகரணங்களின்றி கழிவு நீரகற்றும் பணிகளை மேற்கொண்டால் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்போர் நல சங்கங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதை மீறி யாராவது மனிதர்களைக் கொண்டு பணிகளை மேற்கொண்டால் பொதுமக்கள் உடனடியாக கட்டணமில்லா தேசிய உதவி எண் 14420-ஐ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஆய்வுக் கூட்டத்தில், சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ் குமார் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கழிவுநீர் அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தினால் தேசிய உதவி எண் 14420ல் புகார் தெரிவிக்கலாம்: தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: