ஜோலார்பேட்டை : திருப்பத்தூர் மாவட்டத்தில் விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் க.தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், வேளாண்மை இணை இயக்குனர் கண்ணகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது: வாணியம்பாடி அருகே கோவிந்தாபுரம் ஏரி நீர்வரத்து கால்வாயில் ஒரு டேங்கர் லாரியில் கொண்டு வந்த அமிலக்கழிவுகளை கொட்டி சென்றனர். இதனை மாசுக்கட்டுப்பாடு அதிகாரிகள் அமிலத்தின் தன்மையை குறைக்கும் மாற்று பொருட்களை அதில் கொட்டி சரிசெய்தனர். இருப்பினும் அந்த கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.எம்.கிசான் திட்டத்தில் கிராமப்புற விவசாயிகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறது. நகர்ப்புற விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்குவது இல்லை. ஆம்பூர் அருகே மின்னூர், விண்ணமங்கலம் ஆகிய ஏரிகளுக்கு பாலாற்றில் இருந்து வரும் கால்வாய்களின் சுவர்களை சீரமைப்பு செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் அதிக அளவு ரசாயன கலப்படமற்ற உயிர் உரங்களையும், வேப்பம், புங்கம் புண்ணாக்குகளை வழங்க வேண்டும்.
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பூச்சி கொல்லி மருந்துகளை பெயர் மாற்றியும், காலாவதியான பூச்சி கொல்லி மருந்துகளும் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாணியம்பாடி பகுதியில் கல்லாற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூய்மைப்படுத்த வேண்டும். தோட்டக்கலை மூலம் வழங்கப்படும் மா, பலா போன்ற மரகன்றுகளை மழைக்காலங்களில் வழங்க வேண்டும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். திருப்பத்தூர் பகுதியில் விவசாயிகள் எனக்கூறி ஏரிகளில் உள்ள முரம்பு மண்களை ரியல் எஸ்டேட் செய்யும் நபர்கள் கடத்தி செல்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இவ்வாறு கூறினர். அப்போது, விவசாயிகளின் கோரிக்கைக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
கூட்டத்தில் விவசாய பயிர்களுக்கு காப்பீடு செய்வது தொடர்பாக காப்பீடு நிறுவன அதிகாரி பேசினார். அப்போது விவசாயிகள் சிலர் காப்பீடு செய்தும் பயிர்கள் சேதமடைந்து இழப்பீடு கேட்டால், நிறுவனத்தினர் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே ஆய்வு செய்துவிட்டு பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை எனக்கூறி இழப்பீடு தர மறுக்கின்றனர். இதனால் விவசாயிகள் காப்பீடு செய்தும் இழப்பிடு கிடைப்பதில்லை. இதனால் எங்களுக்கு என்ன பயன் என கூறினர். இதையடுத்து விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post திருப்பத்தூர் மாவட்டத்தில் விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.