மேம்பாலத்தில் தேங்கிய மழைநீரில் பழுதாகி நின்றது; ெசாகுசு கார் கதவுகள் மூடியதால் 3 பேர் தவிப்பு: பெரம்பூரில் இன்று பரபரப்பு

பெரம்பூர்: பெரம்பூரில் மேம்பாலத்தின் கீழ் தேங்கிய மழைநீரில் பழுதாகி நின்ற சொகுசு காரின் கதவுகள் மூடியதால் இரும்பு வியாபாரி உட்பட 3 பேர் சிக்கி தவித்தனர். அவர்களை அப்பகுதி மக்கள் பத்திரமாக மீட்டனர். இன்று காலை நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது. சென்னை கொடுங்கையூர் விவேகானந்தா நகர் பகுதியை சேர்ந்தவர் அரசு (40). இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர், நேற்று தனது மனைவி மற்றும் 10 வயது மகனுடன் காரில் வெளியூர் சென்றுவிட்டு, இன்று அதிகாலை 3 மணி அளவில் பெரம்பூர் முரசொலிமாறன் மேம்பாலம் கீழ் பகுதி வழியாக வந்துகொண்டிருந்தார். அப்போது, மழை பெய்து சுரங்க பாதையின் கீழ் 2 அடிக்கு மேல் மழைநீர் தேங்கி இருந்துள்ளது. பாலத்தை கடக்க முயன்றபோது திடீரென கார் மேம்பாலத்தில் கீழ்பகுதியில் பழுதாகி அனைத்து கதவுகளும் லாக்கானது. இதனால் காருக்குள் இருந்து வெளியில் வரமுடியாமல் 3 பேரும் தவித்தனர்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், தேங்கிய மழைநீரில் இறங்கி கார் கதவை திறக்க உதவி செய்தனர். வெகுநேர போராட்டத்துக்கு பின்னர் காரில் தவித்த அரசு மற்றும் அவரது மனைவி, மகனை பத்திரமாக மீட்டனர். காரை இயக்க முடியாததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி செம்பியம் தீயணைப்பு நிலைய அலுவலர் பரமேஸ்வரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காரை அப்புறப்படுத்த முயன்றனர். காரின் நான்கு சக்கரங்களும் லாக்கானதால் தள்ள முடியவில்லை. இதையடுத்து, கார் சர்வீஸ் சென்டருக்கு போன் செய்து ஊழியர்களை சம்பவ இடத்துக்கு வரவழைத்தனர். பின்னர், காரின் சக்கரங்களை கழட்டி பாலத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.

Related Stories: