தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்க இடைப்பாடி, பூலாம்பட்டி பகுதிகளில் கரும்பு கொள்முதல்; அதிகாரிகள் வருகை

சேலம்: தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்புடன் முழு கரும்பு வழங்க அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து, அந்தந்த மாவட்ட கலெக்டர், கூட்டுறவு இணை பதிவாளர் மற்றும் வேளாண்மை அதிகாரிகள் விவசாயிகளை நேரடியாக சந்தித்து செங்கரும்பு கொள்முதல் செய்யும் பணியை மேற்கொள்ள உள்ளனர். சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே பூலாம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகள், கொங்கணாபுரம், மேச்சேரி, தாரமங்கலம், அயோத்தியாப்பட்டணம் உள்ளிட்ட இடங்களில் செங்கரும்பு அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கும் வகையில், சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கரூர், திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கூட்டுறவு, வேளாண்மை அதிகாரிகள் இடைப்பாடி பகுதிக்கு வந்து செங்கரும்பை ஆய்வு செய்து மொத்தமாக கொள்முதல் செய்யும் வகையில் விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அடுத்த வாரத்தில் கரும்பை கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க உள்ளனர். மொத்தமாக கரும்பு கொள்முதல் செய்யப்படுவதால் சேலம் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதிகாரிகள் கூறியதாவது: பொங்கல் பரிசு தொகுப்புடன் செங்கரும்பு வழங்க மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 8 மாவட்ட அதிகாரிகள் சேலம் மாவட்டத்தில் உள்ள இடைப்பாடி, அயோத்தியாப்பட்டணம் பகுதிகளில் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தைக்கு வர உள்ளனர். அடுத்தவாரத்தில் கரும்புகளை கொள்முதல் செய்து லாரிகள் மூலம் அந்தந்த மாவட்ட ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. சேலம் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேரடியாக பயனடைய உள்ளனர். எவ்வித இடைதரகர் இன்றி நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு கரும்பு கொள்முதலுக்கான பணம் வரவு வைக்கப்படும். இவ்வாறு கூறினர்.

Related Stories: