சூலூர்: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டியில் இருந்து அயோத்தியாபுரம் செல்லும் பகுதியில் நீர்க்தேக்க தண்ணீர் தொட்டி உள்ளது. இதன் அருகே நேற்றிரவு ஒரு வேன் நின்றிருந்தது. அதில் 6க்கும் மேற்பட்டோர் கோயிலுக்கு மாலை அணிந்த உடையில் இருந்தனர். இவர்களை பார்த்து சந்தேகம் அடைந்த பொதுமக்கள் சிலர் விசாரிக்க சென்றுள்ளனர். அப்போது 6 பேரும் தப்பியோடி விட்டனர். இதன்பின்னர் வேனில் பார்த்தபோது அதன் அருகே உள்ள புதரில் நான்கடி உயரம் உள்ள அம்மன் சிலை கிடந்தது. சிலை மீது மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்பட்டு பிளாஸ்டிக் பாட்டிலும் கிடந்தது.
இதையடுத்து அந்த அச்சிலையை அருகில் உள்ள கோயிலில் வைத்து வழிபட மக்கள் முடிவு செய்துள்ளனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் சூலூர் தாசில்தார் செந்தில்குமார், விஏஓ உதயகுமார் மற்றும் போலீசார் வந்து விசாரித்துவிட்டு பின்னர் சாமி சிலையை மீட்டு விஏஓ அலுவலகம் கொண்டு சென்றனர். பிற கோயிலில் திருடப்பட்ட சிலையா, மாலை அணிந்துவந்த நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
