ரஷ்ய விண்வெளிமையத்தை பார்வையிடும் தமிழ்நாட்டு மாணவர்கள்: தாம்பரம் மாநகராட்சி பள்ளியில் படித்த 6 மாணவர்கள் தேர்வாகினர்

சென்னை: ரஷ்ய விண்வெளிமையத்தை பார்வையிட தேர்வாகியுள்ள தாம்பரம் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 6 பேர் அடுத்த மாதம் 9ம் தேதி ரஷ்யாவிற்கு பயணிக்க இருக்கின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் முடங்கி கிடந்த அரசு பள்ளி மாணவர்களின் திறமையை மேம்படுத்தும் விதமாக ராக்கெட் சயின்ஸ் என்ற தலைப்பில் ஆன்லைன் பயிற்சியானது கடந்த ஜனவரி மாதம் வழங்கப்பட்டது. வின்ஞானி சிவதாணு பிள்ளை அகத்தியர் விண்வெளி அறிவியல் குழுமம் சார்பில் வார இறுதி நாட்களில் நடத்தப்பட்ட இந்த பயிற்சியில் 56 அரசு பள்ளிகளை சேர்ந்த 500 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பல்வேறு கட்ட தேர்வுகளுக்கு பிறகு இறுதியாக தேர்வாகியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளுர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 75 மாணவர்கள் ரஷ்யாவில் உள்ள யூரிக்ககாரின் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட உள்ளனர். இவர்களில் செங்கல்பட்டு மாவட்டம் ஜமீன் பல்லாவரத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் படித்த ரோகித், முகமது சாதிக், ரக்ஷித், லதஷா, இலக்கியா மற்றும் லிதிகா ஆகிய 6 மாணவர்களும் தேர்வாகி அடுத்தமாதம் 9ம் தேதி ரஷ்யா செல்லவுள்ளனர்.

ரஷ்யாவில் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட தேர்வாகியுள்ள 6 மாணவர்களுக்கும் தாம்பரம் மாநகராட்சி பள்ளியில் பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது. இதில் பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ இ.கருணாநிதி கலந்து கொண்டு ஆறு மாணவர்களுக்கும் சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கி பாராட்டு தெரிவித்தார். முன்னதாக பள்ளித்தரப்பில் தேர்வாகிய 6 மாணவர்களில் இலக்கியா மற்றும் லித்திக்கா ஆகியோருக்கு நிதியுதவி கிடைக்காமல் இருந்தது.

இதை அறிந்த எம்.எல்.ஏ இ.கருணாநிதி தனது சொந்த நிதியில் ரூ.3 லட்சம் காசோலையாக வழங்கினார். அது மட்டுமின்றி நன்கொடை யாளர்களிடமிருந்து மேலும் ஒரு லட்சம் ரூபாய் பெற்று கொடுத்திருக்கிறார். ரஷ்யாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட தமிழ்நாட்டில் 75 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் நிதியுதவி கிடைத்த 50 மாணவர்கள் முதற்கட்டமாக ஆகஸ்ட் 9ம் தேதி ரஷ்யா செல்லவுள்ளனர். மற்ற 25 மாணவர்கள் அடுத்தாண்டு மே மாதம் அழைத்து செல்லப்பட இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ரஷ்ய விண்வெளிமையத்தை பார்வையிடும் தமிழ்நாட்டு மாணவர்கள்: தாம்பரம் மாநகராட்சி பள்ளியில் படித்த 6 மாணவர்கள் தேர்வாகினர் appeared first on Dinakaran.

Related Stories: