திருத்தணி அருகே பரபரப்பு பேருந்து நிற்காததால் சாலை மறியல்: அதிகாரிகள் சமரசம்

திருத்தணி: திருத்தணி அருகே அரசு பேருந்து நிற்காமல் சென்றதால் கிராம மக்கள் மறியல் ஈடுபட்டனர். திருத்தணி-சித்தூர் சாலையில் முருகூர் கிராமம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அமிர்தாபுரம், திருத்தணி பகுதியில் உள்ள அரசு பள்ளி, கல்லூரிக்கு படிக்க அரசு, தனியார் பேருந்துகளில் சென்று வருகின்றனர். இந்நிலையில், சில நாட்களாக முருகூர் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நின்று பயணிகளை ஏற்றிச்செல்வது கிடையாது என கூறப்படுகிறது. எனவே, இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை வந்த அரசு பேருந்து, முருகூர் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதாக தெரிகிறது. இதனால் காத்திருந்த மக்கள், மாணவர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து முருகூர் பேருந்து நிறுத்தம் அருகே திருத்தணி- சித்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.

இதுபற்றி தகவல் அறிந்ததும், திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ், திருத்தணி வட்டாட்சியர் மதன், எஸ்.ஐ ராக்கிகுமாரி மற்றும் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். இனிமேல் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை ஏற்று மக்கள், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

The post திருத்தணி அருகே பரபரப்பு பேருந்து நிற்காததால் சாலை மறியல்: அதிகாரிகள் சமரசம் appeared first on Dinakaran.

Related Stories: