ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை.. குடும்ப அட்டையை காண்பிக்க தேவையில்லை; பணம் கொடுத்து வாங்கலாம்!!

சென்னை: சென்னையில் உள்ள 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது. பெங்களூர், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாநிலங்களில் விளைச்சல் குறைந்த காரணத்தால், தமிழகத்துக்கு தற்போது தக்காளியின் வரத்து குறைந்துவிட்டது. அதனால் மொத்த மற்றும் சில்லறை மார்க்கெட்டில் விலை தாறுமாறாக ஏறி வருகிறது.கடந்த இரண்டு நாட்களாக ரூ.120 முதல் ரூ.140 வரை இடத்துக்கு ஏற்றவாறு விற்பனை செய்யப்படுகிறது. இது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிலோ ரூ.10க்கும் ரூ.20க்கும் விற்ற தக்காளி தற்போது ரூ.120க்கும் ரூ.140க்கும் விற்கப்படுவதால் குடும்ப பட்ஜெட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தக்காளி விலையை கட்டுக்குள் கொண்டு வர பசுமை பண்ணை நுகர்வோர் கடைகளில் கடந்த வாரம் முதல் கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தக்காளியை பதுக்கி வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தது. இருப்பினும் தக்காளி மொத்த விலையில் கிலோ ரூ.100க்கும், சில்லறை விலையில் ரூ.140க்கும் விற்பனை செய்யப்படுகிறது.தக்காளி விலை, வரும் நாட்களில் உயரும் பட்சத்தில் ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு, தக்காளியை விற்பனை செய்யலாம் என கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் நடத்திய ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது. முதல்கட்டமாக சென்னையில் வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை என 3 ஆக பிரித்து வடசென்னையில் 32 கடைகளிலும், மத்திய சென்னை 25, தென்சென்னை 25 கடைகள் என மொத்தம் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு கடைக்கும் குறைந்தபட்சம் 50 கிலோ தக்காளி விற்பனைக்காக இன்று காலை 8 மணி முதல் அனுப்பி வைக்கப்பட்டது. அதே நேரத்தில், ஒருவருக்கு அதிகபட்சமாக ஒரு கிலோ தக்காளி மட்டுமே ரேஷன் கடைகளில் இன்று வழங்கப்படும். மொத்தமாக வாங்க முடியாது. விவசாயிகளிடம் கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்தாலும் ரேஷன் கடைகளில் கிலோ தக்காளி ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரேஷன் கடைகளில் தக்காளி பெற எந்த கட்டுப்பாடும் இல்லை. குடும்ப அட்டையை காண்பிக்க தேவையில்லை. மக்கள் அருகில் உள்ள தக்காளி விற்கப்படும் எந்த ரேஷன் கடைக்கும் சென்று பணம் கொடுத்து தக்காளி வாங்கலாம்.

The post ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை.. குடும்ப அட்டையை காண்பிக்க தேவையில்லை; பணம் கொடுத்து வாங்கலாம்!! appeared first on Dinakaran.

Related Stories: