டேட்டா என்ட்ரி வேலைக்காக வெளிநாட்டுக்கு செல்வோரை இணையதள மோசடியில் சிக்க வைக்க முயற்சி: காவல்துறை எச்சரிக்கை

சென்னை: கம்போடியா, மியான்மர், வியட்நாம், லாவோஸ் போன்ற தென்கிழக்கு நாடுகளுக்கு டேட்டா என்ட்ரி வேலைக்கு செல்லும் இளைஞர்களை இணையதள மோசடிகளில் ஈடுபட வைப்பதால் விழிப்புடன் இருக்குமாறு தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமீப காலங்களில், இந்தியாவில் இருந்து 20 முதல் 24 வயதுக்குட்பட்ட பல இளைஞர்கள் கம்போடியா, மியான்மர், வியட்நாம், லாவோஸ் மற்றும் தாய்லாந்து போன்ற தென் கிழக்கு நாடுகளுக்கு லாபகரமான வேலை வாய்ப்புகளை வழங்குவதாக உறுதியளித்து ஈர்க்கப்படுகிறார்கள்.

அவர்கள் ஆன்லைன் விளம்பரங்கள் மூலமாகவோ அல்லது சட்டவிரோத ஆட்சேர்ப்பு முகவர்கள் மூலமாகவோ வேலை வாய்ப்பை பெறுகிறார்கள். இந்த இளைஞர்கள் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் அல்லது அதுபோன்ற பதவிகள் போன்ற முறையான வேலை வாய்ப்புகளை சாக்காக வைத்து பணி அமர்த்தப்படுகிறார்கள். இருப்பினும் அங்கு சென்றவுடன் அவர்கள் இணைய அடிமைத்தனத்திற்கு தள்ளப்பட்டு போலியான சமூக ஊடக சுய விவரங்களை உருவாக்கி மக்களை ஏமாற்றுதல், பிரபல கொரியர் நிறுவன பெயரில் மோசடிகள் மற்றும் சந்தேகத்திற்கு இடமில்லாத நபர்களை ஏமாற்றுவதற்கான மோசடித் திட்டங்களில் ஈடுபடுதல் போன்ற சட்டவிரோத இணைய நடவடிக்கைகளில் சிக்க வைக்கப்படுகிறார்கள்.

சட்டவிரோத ஆட்சேர்ப்பு முகவர்களின் செயல்பாடுகளை தமிழ்நாடு காவல்துறை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. மேலும், இந்த இணைய அடிமைத்தனம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள சேலம் மாவட்டம் தம்மம்பட்டி காவல் நிலையத்தில் இரண்டு சட்டவிரோத ஆட்சேர்ப்பு முகவர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவில் 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 2 வழக்குகள் குறித்து முழுமையான விசாரணைக்காக சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளன. இதுசம்பந்தமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேலை வாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை பின்வரும் வழிகாட்டுதல்களை வழங்குகிறது.

* புலம் பெயர்ந்தோரின் பாதுகாவலரை அணுகுவதன் மூலம் வேலையின் தன்மை மற்றும் முகவரின் சுய விவரத்தை முழுமையாக சரிபார்க்கவும்.

* வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்ப, பதிவு செய்யப்பட்ட முகவர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

* ஒருவர் வேலைவாய்ப்பு அல்லது பணி விசாவில் மட்டுமே பணி நிமித்தமாக பயணம் செய்ய வேண்டும். சுற்றுலா விசாவை சுற்றுலா நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

* தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேலைவாய்ப்பு குறித்து பிராந்திய செய்தித்தாள்களில் ஏதேனும் விளம்பரங்கள் வந்தால், அதன் உண்மைத்தன்மையை சரிபார்க்க உள்ளுர் காவல்துறையை அணுக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post டேட்டா என்ட்ரி வேலைக்காக வெளிநாட்டுக்கு செல்வோரை இணையதள மோசடியில் சிக்க வைக்க முயற்சி: காவல்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: