விடியலை ஏற்படுத்தும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்: வேலை இல்லாத 93,187 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து சாதனை

* 32 துறைகளில் 150 க்கும் மேற்பட்ட பணிகளில் திறன் பயிற்சி அளிக்கிறது

* ஆண்டிற்கு ஆயிரக்கணக்கானோருக்கு வேலையை உறுதி செய்கிறது

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் அல்லது வேலையில்லாத இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து அவர்களின் வாழ்வியலில் விடியலை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டுக் கழகம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 2023-24ம் ஆண்டு உள்பட தற்போது வரை 93,187 இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து சாதனை புரிந்துள்ளது.

ஆடை, உடல்நலம், தகவல் தொழில்நுட்பவியல், மின்னணுவியல் மற்றும் வன்பொருள், மூலதனப் பொருட்கள் போன்ற 32க்கும் மேற்பட்ட துறைகள் மற்றும் 150 க்கும் மேற்பட்ட பணிகளுடன் தொடர்புடைய திறன் பயிற்சிகளை இக் கழகம் மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகள் எண்ணற்ற திட்டங்கள் மக்கள் நலன் சார்ந்து வகுக்கப்பட்டு அதனை திறம்பட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலமாக பல்வேறு துறைகளில் வேலை இல்லாதவர்களுக்கு பயிற்சி அளித்து வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரப்பட்டுள்ளன. இந்த மேம்பாட்டு கழகம் திறன் தொடர்பான பயிற்சிக்கான முகமையாக செயல்படுகிறது. மாநிலத்தின் திறன் மேம்பாட்டு சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதன் மூலம் தொழில் வளர்ச்சியில் முதன்மையான மாநிலமாக திகழவும், டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில் தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் புதிய முதலீடுகளை ஈர்க்கவும் உதவிகரமாக இந்த கழகம் உள்ளது.

இதுதவிர, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் வழங்கப்படும் குறுகிய கால திறன் பயிற்சி மூலம் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களிடையே தொழில்சார் திறன்கள் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. குறுகிய கால திறன் பயிற்சிகளை பொறுத்தவரை தமிழ்நாட்டில் உள்ள பள்ளி அல்லது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் அல்லது வேலையில்லாத இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நபர்களுக்குத் தேவையான திறன்கள் மற்றும் பயிற்சியுடன் அவர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதையும், சிறந்த வேலை வாய்ப்புகளைப் பெற அவர்களுக்கு உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய திறன் மேற்கோள் கட்டமைப்பு நிலைகளுடன் கூடிய குறுகிய காலப் பயிற்சியானது, ஆடை, உடல்நலம், தகவல் தொழில்நுட்பவியல், மின்னணுவியல் மற்றும் வன்பொருள், மூலதனப் பொருட்கள் போன்ற 32க்கும் மேற்பட்ட துறைகள் மற்றும் 150 க்கும் மேற்பட்ட பணிகளுடன் தொடர்புடைய திறன் பயிற்சி பெறுவதை உறுதி செய்கிறது.

அதேபோல் தொழிற்சாலை திறன் பள்ளி முன்முயற்சியானது, முன்னணி தொழில் நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுடன் இணைந்து சிறப்புப் பயிற்சிகளை வழங்கவும், வேலை வாய்ப்புகளையும் திறன் மேம்பாட்டுக் கழகம் உறுதி செய்கிறது. இதுவரை 32 தொழிற்சாலைகள், பயிற்சி கூட்டாளர்களாக இணைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த முயற்சியின் கீழ் 4,624 நபர்கள் பல்வேறு திறன்களில் பயிற்சி பெற்றுள்ளனர். பயிற்சி பெற்ற நபர்கள் வெற்றிகரமாக தொழிற்சாலையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

1,413 நபர்கள் தற்போது பயிற்சி பெற்று வருகின்றனர். திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் பயிற்சி பெற்று ஹெச்.டி.பி ஃபைனான்சியல் சர்வீஸ் நிறுனத்தில் துணை மேலாளராக வேலை கிடைத்துள்ள கவுதமி கூறியதாவது: சேலம் மாவட்டம் சின்ன கரட்டூரில் வசித்து வருகிறேன். நான் திருச்செங்கோட்டில் உள்ள கல்லூரியில் பி.ஏ. படித்து முடித்தேன். கல்லூரி படிக்கும் போதே திருமணம் முடித்து வைக்கப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு எனது கணவர் உடல்நலகுறைவால் உயிழந்தார்.

இதனால், குடும்ப வறுமை காரணமாக சின்ன சின்ன வேலைகளுக்கு செல்வது, டியூசன் எடுப்பது போன்ற வேலைகளை செய்து குடும்பத்தை நடத்தி வந்தேன். மேலும் எனக்கு 8ம் வகுப்பு படிக்கும் பெண் உள்ளார். இந்தநிலையில், தமிழ்நாடு திறன் பயிற்சி மேம்பாட்டு கழகத்தின் மூலம் பயிற்சி அளித்து பணியமர்த்தப்படுவதை அறிந்து அதற்கு முயற்சி செய்தேன். இதன் பின்னர், எனக்கு உண்டு உறைவிடம் ஆசிரியர்கள் மூலமாக அதற்கான வாய்ப்புகள் கிடைத்ததை அடுத்து பெங்களூரில் பயிற்சி அளிக்கப்பட்டு HDB Financial Service நிறுவனத்தில் துணை மேலாளராக பணி கிடைத்தது.

இதற்கான உதவிகளை செய்த தமிழக முதல்வருக்கும், விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுகுறித்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலமாக வேலையில்லாத இளைஞர்களை தொழிற்சாலைகளுக்கு அழைத்து சென்று அங்கு அவர்களுக்கு நன்கு பயிற்சி அளித்து அந்த இடத்திலேயே வேலையை வாங்கி தருகிறோம்.

கடந்த மாதம் தூத்துக்குடியில் பொருளாதாரத்தில் பின் தங்கிய 500 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பிரபல நிறுவனங்களில் பயிற்சி அளித்து பணிகளை வாங்கித் தந்திருக்கிறோம். அதேபோல் விரிவான பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு நேரடியாக சென்று, அரசின் நலத்திட்டங்களை எடுத்து கூறி, பழங்குடியின வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் 450 பேரை திரட்டி திருச்சி, சேலம் மற்றும் சென்னை மாவட்டங்களில் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தினோம்.

இதன் முடிவில் தகுதி வாய்ந்த 200 பழங்குடியின இளைஞர்களை தேர்தெடுத்து அவர்களை பெங்களூரில் உள்ள பயிற்சி நிறுவனத்தின் மூலம் 3 மாதம் பயிற்சி அளித்து அதில், 146 இளைஞர்களுக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளோம். இதுபோல் பல்வேறு துறையின் உதவியுடன் வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறோம். திறன் மேம்பாட்டு பயிற்சி கழகத்தின் செயல்பாடுகளை விரிவுப்படுத்த விரைவில் செயலி ஒன்றை வெளியிட உள்ளோம். அதன்படி, பல்வேறு விழிப்புணர்வுகள் மூலமாக செயலியை மக்களிடையே கொண்டு செல்லும் நோக்கில் அடுத்த கட்ட திட்டத்தை வகுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

திறன் மேம்பாட்டு கழகத்தின் ஒன்றிணைந்த திட்டங்கள்
* நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பாளர்களுக்கான திட்டம்

* கலை மற்றும் கைவினை பொருட்களை புதுப்பிக்கும் திட்டம்

* அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கான திறன் பயிற்சி திட்டம்

* மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கான திறன் பயிற்சி திட்டம்

* அரசு சமூக நல இல்லம் மற்றும் சிறப்பு இல்லங்களில் வசிக்கும் குழந்தைகளுக்களுக்கான திறன் பயிற்சி திட்டம்

* நன்னீர் நண்பன் திட்டம்

* வடசென்னை வளர்ச்சி திட்டம்

* திருநங்கைகளுக்கான திறன் பயிற்சி திட்டம்

* பழங்குடியின இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டம்.

The post விடியலை ஏற்படுத்தும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்: வேலை இல்லாத 93,187 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து சாதனை appeared first on Dinakaran.

Related Stories: