வாகனத்தில் இருந்து பறந்து வந்து சாலை முழுவதும் சிதறிய 500 ரூபாய் நோட்டுகள்: போட்டி போட்டு அள்ளிய பொதுமக்கள்

உசிலம்பட்டி: வாகனத்தில் இருந்து சிதறி சாலை முழுவதும் விழுந்த ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான 500 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் போட்டி போட்டு அள்ளிச் சென்றனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, தேனி ரோட்டில் உள்ள மாமரத்துபட்டி விலக்கு பகுதியில் தேனியில் இருந்து ேநற்றுமுன்தினம் காலை மதுரைக்கு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தில் இருந்து திடீரென 500 ரூபாய் நோட்டுகள் சிதறி பறந்து நெடுஞ்சாலையில் விழுந்தது.

பறந்து வந்து விழுந்த 500 ரூபாய் நோட்டுகள், சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு சாலை முழுவதும் சிதறிக் கிடந்தன. இதனைக் கண்ட அப்பகுதி வழியாக சென்றவர்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என பலரும் போட்டி போட்டு பாய்ந்து சென்று ரூபாய் நோட்டுக்களை அள்ளிச் சென்றனர். இந்நிகழ்வு குறித்த சிசிடிவி காட்சிகள் நேற்று முன்தினம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகனத்தில் இருந்து சிதறி ரோட்டில் விழுந்து மக்கள் எடுத்துச் சென்ற 500 ரூபாய் நோட்டுகள் ரூ.3 லட்சத்திற்கும் அதிகம் இருக்கலாம் என கூறப்படுகிறது.

அவ்வழியாக வந்த டூவீலரில் இருந்தோ, பஸ்சில் இருந்தோ இந்த பணம் வீசப்பட்டதா அல்லது வேறு யாரும் திருடிச் செல்லும்போது, பிடிபடலாம் என்பதால் வீசி விட்டு தப்பிச் சென்றனரா என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த பணம் யாருக்கு சொந்தமானது, சிதறிய பணத்தை யார் யாரெல்லாம் எடுத்துச் சென்றனர் என்ற பட்டியலையும் போலீசார் தயாரித்து வருகின்றனர்.

The post வாகனத்தில் இருந்து பறந்து வந்து சாலை முழுவதும் சிதறிய 500 ரூபாய் நோட்டுகள்: போட்டி போட்டு அள்ளிய பொதுமக்கள் appeared first on Dinakaran.

Related Stories: